Seeman with Prabhakaran பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் குறித்த சர்ச்சை

பிரபாகரனுடனான சந்திப்பு பற்றி தற்போது அவர் சற்று மிகைப்படுத்தப்பட்ட விசயங்களை பேசுவதாக, சக அரசியல்வாதிகள் அவரை விமர்சிக்கின்றனர்.;

Update: 2023-12-07 12:48 GMT

பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது மேடைகளில் அரங்கம் அதிர பேசுவார். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழ போராட்டம் குறித்தும் உணர்ச்சி பெருக்குடன் பேசுவார்.

அவர் பேசும் மேடைகளில் எல்லாம் பிரபாகரன் பற்றி பேசாமல் இருந்ததே இல்லை. பிரபாகரனுடன் நெருங்கி பழகி உள்ளேன், போர் பயிற்சியை நேரில் கண்டேன், அவருடனும் மதினியுடனும் இட்லி சாப்பிட்டேன், ஆமைக்கறி தந்தார்கள் என்று கூறுவார். அவரது பேச்சை கேட்கும் தம்பிகள் புல்லரித்து போய்விடுவர்.

அதே நேரத்தில் அவரது பிரபாகரன் பேச்சை கேலி செய்யாதவர்களே இல்லை. இணையத்தில் சீமான் பற்றியும் ஆமைக்கறி சாப்பிட்டது பற்றியும் கமெண்டுகள் இன்னமும் பறந்து கொண்டு தான் இருக்கின்றன.

சீமான், பிரபாகரன் சந்திப்பு பற்றி சமூக வலைதளங்களில் சமீப காலமாகவே மிகவும் காரசாரமாக விவாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதுபற்றிய சர்ச்சைகளுக்கு ஏற்கனவே சீமான் பல முறை விளக்கம் அளித்திருக்கிறார்.

பிரபாகரனை சந்தித்த விஷயத்தின் அடிப்படையில், சீமான் சில மிகைப்படுத்தப்பட விசயங்களை பேசிவருவதாக, தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கூறிவருகின்றனர். அவரை விமர்சிக்கும் பலரும் அவர் பிரபாகரனை சந்திக்கவில்லை என்று எங்கேயும் கூறவில்லை

இந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மை பற்றி பெயர் வெளியிட விரும்பாத சில விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மற்றும் ஈழப் போரில் நேரடித் தொடர்புடையவர்கள் கூறுகையில், இது உண்மையான புகைப்படம்தான். அதில் சந்தேகம் இல்லை. வழக்கமாக, அரசியல் பிரமுகர்கள் யாரும் பிரபாகரனை சந்தித்தால், அதுபற்றிய புகைப்படம், வீடியோவை விடுதலைப் புலிகளே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது வழக்கம். ஆனால், சீமான் விஷயத்தில் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. அதற்கான காரணம் அவர்களுக்கே வெளிச்சம். எனவேதான், சிலர் இந்த புகைப்படங்களின் மீது சந்தேகம் எழுப்புகிறார்கள்.

ஒருவேளை போர்க்காலம் என்பதால் அதற்கான சூழல் ஏற்படாமல் போயிருக்கலாம். அத்துடன்,பிரபாகரனை சந்தித்தபோது சீமான் ஒரு சினிமா இயக்குனராகவே சென்றிருந்தா ர்; அரசியல்வாதியாக அல்ல. மேலும், பாலு மகேந்திராவை பார்க்கவே பிரபாகரன் விரும்பினார். அவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், அவருக்குப் பதிலாக சீமானை அழைத்துச் சென்றுள்ளனர் எனக் குறிப்பிட்டனர்.

சீமான் மட்டுமல்ல, தமிழ் சினிமாவை சேர்ந்த பலரையும் நேரில் வரவழைத்து பிரபாகரன் பேசியிருக்கிறார். இயக்குனர் மகேந்திரன் கூட சினிமாப் பணி நிமித்தமாக, 2002ம் ஆண்டில் பிரபாகரனை நேரில் சந்தித்து பேசியுள்ளார்

சீமான், பிரபாகரன் சந்திப்பு 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிகழ்ந்ததாக, சீமானே ஊடகங்களில் கூறியிருக்கிறார். பிரபாகரனை சந்தித்தது போது என்னென்ன விசயங்கள் பற்றி பேசினேன் என்று 2009ம் ஆண்டில் ஆனந்த விகடன் ஊடகத்திற்கு சீமான் விரிவான பேட்டி அளித்திருக்கிறார்.

2009ம் ஆண்டில் சீமான் ஊடகங்களில் அளித்த பேட்டிக்கும், சமீப காலமாக அவர் பேசிவருவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. பிரபாகரனுடனான சந்திப்பு பற்றி தற்போது அவர் சற்று மிகைப்படுத்தப்பட்ட விசயங்களை பேசுவதாக, சக அரசியல்வாதிகள் அவரை விமர்சிக்கின்றனர். மற்றபடி, ‘அவர் பிரபாகரனை சந்திக்கவே இல்லை; போட்டோஷாப் செய்த புகைப்படத்தை வைத்து ஏமாற்றுகிறார் என்பது தவறான தகவல்.

Tags:    

Similar News