சின்னசேலம் அருகே பள்ளி பேருந்துகளுக்கு தீவைப்பு.. கலவரம்: போலீசார் தடியடி
Kallakkurichi News - சின்னசேலம் அருகே பள்ளி பேருந்துகளுக்கு தீவைப்பு மற்றும் கலவரத்தால் போலீசார் தடியடி நடத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கணியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி, பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13ம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து குதித்து ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக பெற்றோரும் உறவினர்களும், நீதி கேட்டு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டம் 4 வது நாளாக நடைபெற்றுவரும் நிலையில், மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த 5க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்தனர். மேலும் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. இதனால் பள்ளி வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கியால் வானத்தை நோக்கியும் சுட்டனர். ஆனாலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் போலீசார் சிலர் காயமடைந்தனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் போராட்டக்காரர்களை வெளி மாவட்டங்களான கடலூர், சேலம், விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.