சேலம் மாடர்ன் தியேட்டர் விவகாரம்: அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

சேலம் மாடர்ன் தியேட்டர் விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Update: 2023-12-15 15:06 GMT

பைல் படம்

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலத்தில் முன்பு செயல்பட்டு வந்த மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலில் சிலை அமைப்பதற்காக, அந்த இடத்தை கேட்டு, அரசின் சார்பில் நிர்ப்பந்திக்கப்படுவதாக பத்திரிக்கையில் செய்திகள் வந்துள்ளன.

இந்த நிறுவனம் செயல்பட்டு வந்த 8.9 ஏக்கர் நிலமானது, தற்போது, மனைகளாகவும், வணிகப் பகுதியாகவும் மாற்றப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பகுதியின் நுழைவாயில் வளைவு சேலம்-ஏற்காடு நெடுஞ்சாலையில் கன்னங்குறிச்சி கிராமத்தின் சர்வே எண்.8இல் உள்ளது.

இந்த சாலையை விரிவாக்கம் செய்ய இருப்பது உத்தேசிக்கப்பட்டுள்ளதால், நெடுஞ்சாலைத்துறை நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களால், 2.12.2023 அன்று, அளவீடு நடத்தப்பட்டுள்ளது. இந்த அளவீட்டின் போது, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு முழுமையாக, நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் கண்டறியப்பட்டது. அரசின் நிலவரை படத்தில் உள்ளவாறு, எல்லைகளை வரையறுப்பதற்காக, நெடுஞ்சாலையினுடைய எல்லையில் எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.

மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. எனவே, இந்த நெடுஞ்சாலைத்துறை இடம் தவிர, வேறு இடத்தைக் கேட்டு அரசுத்தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என தெளிவுபடுத்தப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News