தமிழகத்தில் சாணி பவுடர் விற்பனைக்கு விரைவில் தடை: அமைச்சர் தகவல்
சாணி பவுடர் விற்பனைக்கு தமிழகத்தில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற கொலைக் குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் உள்ளிட்டவை தொடா்பான விவரங்களை, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த ஆண்டு நாடு முழுவதும் நடந்த 1,64,033 தற்கொலைகளில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலமும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 18,925 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தற்கொலைக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மருந்து கடைகளில் தனி நபராக வந்து கேட்பவர்களுக்கு சாணி பவுடர், எலி பேஸ்ட் தரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.