9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்: நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு
9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.;
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற 6 மற்றும் 9- ந்தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
மொத்தமுள்ள 27,791 பதவிகளுக்கு 1 லட்சத்து 698 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். பரிசீலனையின்போது 1,246 வேட்புமனுக்கள் நிராகரிக்கப் பட்டன. 4 பதவிகளுக்கு 3,346 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 24,416 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 80,819 வேட்பாளர்கள்களத்தில் உள்ளனர். இதில் 9 மாவட்டங்களில் உள்ள 3 9 ஊராட்சிஒன்றியங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் , ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 17,662 பதவிகளுக்கு முதற்கட்டமாக நாளை (6- ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நடக்கும் பகுதிகளில் கடந்த 26 ந்தேதி முதல் தீவிர பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியும், அண்ணா திமுக தலைமையிலான கூட்டணியும் போட்டியிடுகிறது.
இதுதவிர பா.ம.க., மக்கள் நீதிமய்யம், தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் தனித்தும் களம் காண்கின்றன. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் களத்தில் நிற்கின்றனர். ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டதை நெருங்கி உள்ளது. வேட்பாளர்களும், அவர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகளும், தொண்டர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் தேர்தல் பிரச்சாரம் நேற்று (திங்கட்கிழமை ) மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பிரச்சாரம் முடிந்த கையோடு வெளியூரை சேர்ந்தவர்கள் வெளியேறவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 3 9 ஊராட்சிஒன்றியங்கள், அதைச் சுற்றி 5கி.மீ. தொலைவுவரை உள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுக்கடைகளை திறக்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. (5-ம் தேதி) காலை 11 மணி முதல் வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், கை மை, அரக்கு உள்ளிட்ட பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. முதல் கட்ட தேர்தலுக்கு 7 ஆயிரத்து 921 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர்களாக 171 பேரும், உதவி அலுவலர்களாக 3 ஆயிரத்து 7 7 7 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்குப் பதிவு பணியில் 1 லட்சத்து 1 0 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். முதல் கட்ட தேர்தலில் 4 1 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். நாளை (6-ம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை நடக்கிறது.
மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர்,கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு பாதுகாப்புப் பணியில் 17,130 போலீசார்,3,405 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.2கட்ட தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள் 1 2- ந் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.