இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவி தொகை: ஐகோர்ட்டு உத்தரவு

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவி தொகை வழங்கவேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2024-06-13 17:41 GMT

சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்)

வழக்கறிஞர்களிடம் ஜூனியர்களாக பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஒருசில தொழில்களில் ஊதியம் என்பது குறைந்தபட்சம் கூட கிடைக்கப்படாத நிலைமை தற்போதும் நீடித்து வருகிறது. இப்படியான தொழில்களில் முதன்மையானது வழக்கறிஞர் தொழில். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றுபவர்கள் தங்களுக்கு உதவிக்கான இளம் வழக்கறிஞர்களை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த இளம் வழக்கறிஞர்களுக்கு முறையான ஊதியம் ஏதும் தரப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் உதவியாளர்களாக பணியாற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித்தொகையாக வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, கோவை மற்றும் மதுரையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.20,000 வழங்கப்பட வேண்டும். மற்ற மாவட்டங்களில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.15,000 வழங்கப்பட வேண்டும் என்றும் உதவித்தொகை வழங்குவதில் பாலின அடிப்படையில் எவ்வித பாகுபாடும் காட்டப்படக்கூடாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இளம் வழக்கறிஞர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் இன்ன பிற பிரச்னைகள் இந்த தொழிலின் ஓர் அங்கம் என்று பரவலாக சொல்லப்படுகிறது. இளம் வழக்கறிஞர்கள் இதற்கு பழகிவிட வேண்டும் எனவும் சொல்லப்படுகிறது. இது குறித்தும் நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

"இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. மட்டுமல்ல. இழிவான சிந்தனையாகும். இளம் வழக்கறிஞர்கள் எதற்கும் பழக வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் கற்றல் மற்றும் தொழிலில் வளர்ச்சிக்கு பாதுகாப்பான மற்றும் சாதகமான சூழ்நிலையை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இளம் வழக்கறிஞர்களுக்கான உதவி தொகை குறித்து நீதிமன்றமே தலையீடு செய்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. நீதிமன்ற உத்தரவு நடைமுறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று இளம் வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News