ரூ.12.5 கோடி மதிப்பு கடத்தல் தங்கம் பறிமுதல்: வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிரடி
சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம், ரூ.12.5 கோடி மதிப்புள்ள 20.5 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளது.
சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) வெவ்வேறு 3 நடவடிக்கைகளில் ரூ. 12.50 கோடி மதிப்புள்ள சுமார் 20.5 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளது.
இலங்கையிலிருந்து ராமநாதபுரத்தின் வடக்குக் கடற்கரையான தங்கச்சிமடம் வழியாக வெளிநாட்டு தங்கம் மீன்பிடிப் படகில் கடத்தப்படுவதாக டி.ஆர்.ஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட அவர்கள், தங்கச்சிமடத்தின் வடக்குக் கடற்கரை அருகே 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் 5.37 கோடி ரூபாய் மதிப்புள்ள, 9.063 கிலோ கிராம் எடையுள்ள, வெளிநாட்டு கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 31.07.2023 அன்று இலங்கையில் இருந்து தங்கம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு படகுகளுடன் இது பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே நாளில், அதாவது 31.07.2023 அன்று, குறிப்பிட்ட உளவுத்துறை தகவல் அடிப்படையில், டி.ஆர்.ஐ அதிகாரிகள் கொண்ட மற்றொரு குழு, ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஒரு விமானத்தை சோதனை செய்தனர். அதில் பயணம் செய்த பயணிகளை பரிசோதித்ததில், 3.17 கோடி ரூபாய் மதிப்புள்ள, 5.17 கிலோ வெளிநாட்டு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.
மூன்றாவது நடவடிக்கையில், டி.ஆர்.ஐ அதிகாரிகள் குழு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே 6 பேரை இடைமறித்து சோதனை செய்தது. இவர்களிடமிருந்து பசை வடிவத்தில் சுமார் ரூ.3.8 கோடி மதிப்புள்ள 6.275 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.