எவரெஸ்டில் ஏறி சாதனை படைக்க செல்லும் முத்தமிழ்செல்விக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
எவரெஸ்டில் ஏறி சாதனை படைக்க செல்லும் முத்தமிழ்செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கினார்.;
உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய செல்லும் தமிழ்நாட்டைச் சார்ந்த முத்தமிழ்செல்விக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவியாக ரூ.10 இலட்சத்திற்கான காசோலையினை இன்று (28.03.2023) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
2023-ஆம் ஆண்டு "ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்" மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்படும் தேர்வு செய்யப்பட்டுள்ள குழுவினருடன் இணைந்து உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய சென்னையைச் சார்ந்த முத்தமிழ்ச் செல்வி திட்டமிட்டுள்ளார்.
நேபாள அரசின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள இந்த எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். இவர் பள்ளிப் பருவத்தில் தடகள வீராங்கனையாக விளங்கியவர். 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மகளிர் தின விழாவினையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாவட்டம், மலைப்பட்டு மலையில் 155 அடி உயரத்திலிருந்து கண்ணை கட்டிக்கொண்டு 58 நிமிடங்களில் இறங்கினார்.
பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிமாச்சல் பிரதேசம், குலுமணாலி மலையில் தனது இரு பிள்ளைகளுடன் ஒரு சிறுமியை முதுகில் கட்டிக்கொண்டும், மற்றொரு சிறுமியுடன் 165 அடி உயரத்தில் இருந்து கண்ணை கட்டிக்கொண்டு நடந்து வந்து 55 நிமிடங்களில் கீழே இறங்கினார்.
வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் பரப்பிட 2022-ஆம் ஆண்டு குதிரையில் 3 மணிநேரம் அமர்ந்து 1,389 முறை வில் அம்பு எய்து 87 புள்ளிகள் பெற்றார். மேலும், இமாச்சல பிரதேசம், லடாக் பகுதி, காங் யெட்சே பீக் -2 (KANG YATSE HILL) மலையில் 5500 மீட்டர் வரை ஏறி சாதனை படைத்தார்.
எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க முத்தமிழ்செல்வி நிதியுதவி வேண்டி கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிதியுதவியாக ரூ.10 இலட்சத்திற்கான காசோலையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (28.03.2023) வழங்கினார்.
இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, பொது மேலாளர் (நிருவாகம்) மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.