நீரில் மூழ்கி சிறுவர்கள் மரணம்: இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு
நீரில் மூழ்கி மரணம் அடைந்த 4 சிறுவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்;
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள சிட்கோ முதலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் இனியவன் (வயது 12). அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் சந்துரு (12). இவன் பொன்னாபுரம் நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் இருவரும் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து வீட்டின் அருகில் உள்ள நொய்யல் ஆற்றில் குளிக்க சென்றனர்.
அங்கு 5 பேரும் ஒன்றாக சேர்ந்து நொய்யல் ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இனியவன் மற்றும் சந்துரு ஆகியோர் நீரில் மூழ்கினர். இதைப் பார்த்து மற்ற 3 பேரும் அலறினர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று நீரில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் 2 மாணவர்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், முதலிபாளையம் கிராமம், மஜரா சிட்கோ, டி.நகர் என்ற முகவரியைச் சேர்ந்த இனியவன், த/பெ.பாலசுந்தரம் (வயது 12) மற்றும் சந்துரு, த/பெ.பாண்டியராஜன் (வயது 12) ஆகிய இருவரும் நேற்று அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் குளித்த பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மத்தூர் உள்வட்டம், பட்ரஅள்ளி தரப்பு, முத்துநகர் என்ற முகவரியைச் சேர்ந்த முருகன், பார்வதி தம்பதியினரின் குழந்தைகள் புவனா (வயது 11) மற்றும் வினோத் (வயது 7) ஆகியோர் நேற்று பர்கூர் வட்டம், நாகம்பட்டி தரப்பு, எம்.பள்ளத்தூர் ஏரியில் குளித்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த நான்கு சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.