தமிழக அரசு வேலைகளில் 100 சதவீதம் தமிழருக்கே வழங்க கோரி தீர்மானம்

தமிழகத்தில் அரசு வேலைகளில் 100 சதவீதம் தமிழருக்கே வழங்க கோரி தமிழ் தேசிய பேரியக்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

Update: 2022-04-01 14:42 GMT

தீர்மானங்களை விளக்கி பேட்டி அளித்தார் பெ. மணியரசன்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் இன்று திருச்சியில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத்தலைவர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன்,பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-

கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முனைப்போடுசெயலாற்றி வரும் நிலையில், அதற்கு ஆதரவாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் சௌமித்திர குமார் ஹல்தர் தொடர்ந்து செயல்பட்டு வரும் போக்குக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

கடந்த 2019 ஜனவரியில், மேக்கேத்தாட்டு அணையின் விரிவான திட்ட அறிக்கையைக் கோரிப் பெற்றவர், அன்றைய நடுவண் நீர் ஆற்றல் துறைச் செயலாளராக இருந்த இதே ஹல்தர்தான். அந்த அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க அனுப்பி வைத்தவரும்அவரே. இன்று, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அவரே உள்ள நிலையில், ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் மேக்கேதாட்டு அணை குறித்து விவாதிக்க வேண்டுமென நிகழ்ச்சி நிரலில்சேர்ப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து கர்நாடகத் தரப்புக்கு ஆதரவாக நின்று, மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர உடந்தையாகச் செயல்படும் ஹல்தாரை இந்திய அரசு அப்பணியிலிருந்து உடனே விடுவிக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் குடியேறி தமிழர்களின் தொழில், வணிகம்,வேலை வாய்ப்பை அபகரிக்கும் போக்கு தீவிரப்பட்டுள்ளது. இதனால் மண்ணின் மக்கள் ஒவ்வொருதுறையிலும் புறக்கணிக்கப்பட்டு சொந்தத் தாயகத்திலேயே இரண்டாந்தரக் குடிமக்களாக மாற்றப்படும்அவலம் உள்ளது. தமிழ்நாட்டின் தொழில் - வணிகத்தைத் தீர்மானிப்பவர்களாக மார்வாடிகளும், குஜராத்திகளும் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்கள் வளர்ந்து வருவதால் .தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கான தமிழ் இளையோர் படிப்புக்குத் தகுந்த வேலையின்றியும், குறைகூலிவேலைகளைப் பெற்றும் உழன்றுவரும் சூழலில், மிகப்பெரும் எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர்கள் வந்து தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள்.

இந்தியாவின் கர்நாடகம், மகாராட்டிரம், குஜராத், அரியானா போன்ற பல மாநிலங்களில் தங்களது மாநிலங்களில், மண்ணின் மக்களுக்கு வேலை என்பதை உறுதி செய்து  தனிச்சட்டங்களும், அரசாணைகளும் இயற்றி  இருக்கிறார்கள். 

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டு இளையோருக்கே 75சதவீதவேலைகளை உறுதி செய்வோம் எனக் கூறி ஆட்சியைப் பிடித்த தி.மு.க., தற்போதுவரை அதற்காக சட்டமியற்றாமல் தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது. இப்போக்கைக் கண்டித்தும்,தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமெனக் கோரியும் கடந்த 22.10.2021 அன்று, சென்னைபாரிமுனையில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம்தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை எவ்விதநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக தமிழ்நாட்டு அரசு வேலைகளில் 100 விழுக்காடும், இந்திய அரசுமற்றும் தனியார் துறை வேலைகளில் 90 விழுக்காடும் தமிழர்களுக்கே என உறுதி செய்து தனிச்சட்டம்இயற்ற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.சீனாவின் திபெத்திலிருந்து வரும் ஏதிலியரை கண்ணியமாக நடத்தி, அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து  தரும் அதே நேரம்  ஈழத்தமிழர் ஏதிலியருக்கு ஏதிலியர் தகுதி வழங்கி, அவர்களுக்கு வாழ்வுரிமைவழங்கிட உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களில் தகுதியானோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கிப்பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News