பெண்களின் வங்கி கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கிற்கு மாற்ற வேண்டுகோள்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கிற்கு மாற்ற முதலமைச்சருக்கு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் கடிதம் எழுதியுள்ளார்

Update: 2023-09-24 14:21 GMT

தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் முதலமைச்சர்.ஸ்டாலினுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிப்பதாவது: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதை எடுக்கும் போது சில கஷ்டங்களும், பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.

வங்கியில் 2 வகையான சேமிப்பு கணக்குகள் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு என்று சொல்லக் கூடியதாகும். அதாவது கணக்கில் சிறு தொகை கூட இருப்பு இல்லாமல் முழுமையாக எடுக்கவும், டெபாசிட் செய்யக்கூடிய வசதியாகும். இவ்வகை வங்கி கணக்கில் இருந்து முழுமையான தொகை எடுத்தாலும் கூட அபராதம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது.

மற்றொரு வகை சாதாரண சேமிப்பு கணக்காகும். இந்த கணக்கில் குறைந்த பட்சம் ரூ.500 அல்லது ரூ.1000 இருப்பு இருக்க வேண்டும். குறைந்த பட்ச இருப்பை விட பணம் குறையும் போது அபராதம் வசூலிக்கப்படும் நடைமுறை உள்ளது.

வங்கி விதிகளின்படி ஜீரோ பேலன்ஸ் கணக்கை சாதாரண சேமிப்பு கணக்கிற்கு மாற்றலாம். ஆனால் சாதாரண சேமிப்பு கணக்கை ஜீரோ பேலன்ஸ் கணக்கிற்கு மாற்றம் செய்ய இயலாது. இத்திட்டத்தில் பெரும்பாலான பயனாளிகள் கொடுத்துள்ள வங்கி கணக்கு சாதாரண சேமிப்பு கணக்காகும். 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கு வைத்திருக்கவில்லை. அதனால் குறைந்தபட்ச இருப்பு இல்லாத காரணத்திற்காக குறிப்பிட்ட சிறு தொகை அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

எனவே வங்கிகள் குறைந்த இருப்பிற்காக வசூலிக்கப்படும் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களின் கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' கணக்காக மாற்ற அரசு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இத்திட்டத்தில் பயன் அடையும் பெண்கள் எவ்வித கஷ்டமும் இல்லாமல் அபராத கட்டணமும் இன்றி முழுமையாக பணத்தை பெற இந்த இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News