ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.;

Update: 2022-10-05 04:41 GMT

தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயம் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களுள் ஒன்றாகும். சர்வதேச அளவிலான 'பசிலிக்கா' அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்துக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து வழிபடுவது வழக்கம்.

அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சார்லஸ் (வயது 38), அவருடைய தம்பிகள் பிரதிவ்ராஜ்(36), தாவிதுராஜ்(30) ஆகியோர் உள்பட 57 பேரை கொண்ட குழுவினர் பூண்டி மாதா பேராலயத்துக்கு கடந்த திங்கட்கிழமை ஒரு பஸ்சில் ஆன்மிக சுற்றுலாவாக சென்றனர்.

வழியில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால் அதனை ரசித்தனர். பின்னர் ஆற்றில் இறங்கி குளிக்க திட்டமிட்டனர். பூண்டி மாதா பேராலயம் அருகில் உள்ள கொள்ளிடம் செங்கரையூர் பாலம் அருகே பஸ்சை நிறுத்தி விட்டு கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்த நிலையில் ஆற்றில் இறங்கி குளித்தவர்கள் அதன் ஆழமான பகுதிக்கு சென்று உள்ளனர். அப்போது சார்லஸ், அவருடைய தம்பிகள் பிரதிவ்ராஜ், தாவிதுராஜ் மற்றும் ஹெர்பல், பிரவீன்ராஜ், ஈசாக் ஆகிய ஆறு பேர் ஆற்றில் மூழ்கி பலியானார்கள். இதைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் அவர்களின் உடலை நீண்ட நேரம் தேடி கண்டு பிடித்தனர். மீட்கப்பட்ட ஆறு பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டு திருவையாறு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆறு பேர் ஆற்றில் மூழ்கி இறந்தது தொடர்பாக தமிழக முதல்வரோ, தூத்துக்குடி எம்பி கனிமொழியோ அல்லது அரசின் முக்கிய பதவிகளில் உள்ள யாரும் ஒரு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. ஆறுதலும் கூறவில்லை. பண உதவியும் செய்யவில்லை என சார்லசின் உறவினர் ஒருவர் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்து அந்த செய்தி பரபரப்பாக வெளியானது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் உள்ள சிலுவை பட்டி கிராமத்திற்கு வருகை தந்த தமிழக மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் உள்ளிட்டவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான ஆறு பேரில் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வந்தனர். அப்போது அவர்களிடம் இறந்தவர்களின் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். அதன்பின்னர் தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் 6 குடும்பத்திற்கும் 6 லட்ச ரூபாயை தி.மு.க. சார்பில் நிதி உதவியாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த ஆறு பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் எனவும், முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து இந்த தொகை வழங்கப்படும் எனவும் முதல் அமைச்சர் மு க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News