கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது;

Update: 2021-11-09 15:13 GMT

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த விஜயகோபால் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், "பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவின்படி, பேரிடரால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளுக்கு குறைந்தபட்ச நிவாரணம் வழங்கவேண்டும் என்றும், அது குறித்து மாநில அரசுகள் வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளது.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயும், ஒரு வாரம் சிகிச்சை பெற்றவர்களுக்கு 4 ஆயிரத்து 300 ரூபாயும், ஒரு வாரத்திற்கு மேல் சிகிச்சை பெறக் கூடியவர்களுக்கு 12 ஆயிரத்து 700 ரூபாய் வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் 2016ஆம் விதிமுறைகள் உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் கொரோனா தொடர்பான பொதுநல வழக்கு விசாரணையின்போது, கொரோனா உயிரிழப்புகளுக்கும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும் என்று மத்திய  அரசு தெரிவித்துள்ளது" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த 36 ஆயிரத்து 200 பேரின் குடும்பத்தினருக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட உள்ளதாக கூறினார்.

இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 50 ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக நிவாரணம் வழங்குவது குறித்த கருத்தை பெற்று தெரிவிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News