காக்கி அணை திறப்பு: சபரிமலைக்கு செல்ல அனுமதி ரத்து
கேரளாவில் கனமழை காரணமாக நீர் மட்டம் உயர்ந்து வருவதால், 10 அணைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.;
இது குறித்து கேரள வருவாய் துறை அமைச்சர், கூறுகையில், காக்கி அணையின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி அதிகரித்து வருவதால் அணையை திறந்து விட முடிவு செய்யப்பட்டது. இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால், சபரிமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 20 முதல் அக்டோபர் 24 வரை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது..
அக்டோபர் 20 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருவதால், பம்பையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பம்பா ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களை மாவட்டத்திலுள்ள நிவாரண முகாம்களுக்கு வெளியேற்ற அல்லது மாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. .
தற்போது, மாவட்டத்தில் 83 முகாம்களில் 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாரும் பீதி அடையத் தேவையில்லை, வதந்திகளை பரப்ப வேண்டாம். இருப்பினும், வெள்ளம் அல்லது நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறினார்.
காக்கி, சோலையார், மாட்டுப்பட்டி, மூழியார், குண்டலா மற்றும் பீச்சி ஆகிய 10 அணைகளுக்கு ரெட் அலர்ட்டும், எட்டு அணைகளுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் விடப்பட்டுள்ளது. இடுக்கி நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் 2,396.96 அடியாக உயர்ந்துள்ளதால், ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அச்சங்கோவில் ஆற்றின் கரையோரத்தில் உள்ள பந்தல் அருகே உள்ள சேரிக்கல், பூசிக்காடு, முடியூர்கோணம் மற்றும் குரம்பாலா பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அச்சன்கோவிலில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், ஆரண்முலா, கிடங்கனூர் மற்றும் ஓமலூர் ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்வேறு நிவாரண முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். திருச்சூர் மாவட்ட ஆட்சியர் சாலக்குடி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார், பகல் நேரத்தில் சோலையார் அணை திறக்கப்படும் என்பதால் நீர்மட்டம் உயரக்கூடும்.
இதற்கிடையே, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க ஏடிஜிபி விஜய் சகாரேவை நோடல் அதிகாரியாக மாநில அரசு நியமித்துள்ளது.