தேனி தொகுதி தேர்தல் வழக்கு: ரவீந்திரநாத் எம்.பி. நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்
தேனி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கில் ரவீந்திரநாத் எம்.பி. சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத். இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளரான இளங்கோவன் இரண்டாவது இடத்தை பிடித்தார். வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் ரவீந்திரநாத் வெற்றி அப்போதே விமர்சனத்துக்குள்ளானது.
இதற்கிடையே, வேட்புமனுவில் சொத்து உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்து உள்ளதால், அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி சுந்தர் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் ரவீந்திரநாத் எம்.பி. நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரவீந்திரநாத் எம்.பி. இன்று திடீரென நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது, நிறுவனம் ஒன்றின் இயக்குநராக இருந்தது, வங்கியில் கடன் வாங்கியது மற்றும் தேர்தலின் போது வாக்களர்களுக்கு பணம் அளித்ததாக வழக்கு பதிவு செயப்பட்டது உள்ளிட்டவை குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அனைத்து கேள்விகளுக்கும் சாட்சி கூண்டில் ஏறி பதில் அளித்த ரவீந்தரநாத் எம்.பி., அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தார். மேலும், ரவீந்திரநாத் எம்.பி.யிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.