ராமஜெயம் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணையில் மீண்டும் சிக்கல்
ராமஜெயம் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணையில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே. என். நேருவின் சகோதரர் தொழிலதிபர் கே.என்.ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். திருச்சி தில்லை நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து நடை பயிற்சி சென்றபோது மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று கொலை செய்து கை கால்களை இரும்பு கம்பியால் கட்டி போர்வையால் உடலை சுற்றி கல்லணை ரோட்டில் பொன்னி டெல்டா குடியிருப்பு அருகே உடலை வீசி சென்றனர். இந்த கொலை வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு பற்றி முதலில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு சி. பி. சி. ஐ.டி. போலீஸ் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐடி போலீசார் சுமார் ஐந்து ஆண்டு காலம் விசாரணை நடத்தியும் கொலைக்கான காரணம், குற்றவாளிகள் யார் என்பது போன்ற விவரங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் மனைவி லதா மதுரை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரினார். இதனை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுபடி இந்த வழக்கு சி.பி.ஐ. போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிஐ போலீசாரும் சுமார் 2 ஆண்டு காலம் விசாரணை நடத்தினார்கள்.ஆனால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கை மீண்டும் சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க வேண்டும் என ராமஜெயம் குடும்பத்தினர் தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கு மீண்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது .இதனைத் தொடர்ந்து சி.பி.சி. டி. போலீஸ் பிரிவில் இதற்காக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் டி.எஸ்.பி. மதன் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்பட்ட திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள மாநகராட்சி ஆய்வு மாளிகையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள் .முதல் கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் சிலரிடம் விசாரணை நடத்தினார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி சாமி ரவி என்பவர் உள்பட 13 பேரை பிடித்து விசாரணை நடத்தி அவர்களிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக கோர்ட்டு அனுமதி பெற வேண்டும் என்பதால் இவர்கள் 13 பேரையும் இன்று திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண் 6 கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். அப்போது ரவுடிகள் தரப்பில் ஆஜரான சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் அலெக்ஸ் சி. பி. சி.ஐ. டி.போலீஸ் நடைமுறைப்படி போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு இணையான அதிகாரி தான் உண்மை கண்டறியும் பரி சோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்த வழக்கில் துணை சூப்பிரண்டு தான் மனு தாக்கல் செய்து உள்ளார். ஆதலால் இந்த மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என வாதிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் சிவகுமார் வழக்கின் விசாரணையை வருகிற ஏழாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினம் இந்த வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆஜராஜி மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார் இதனால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அலெக்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ராமஜெயம் கொலை வழக்கில் ஆரம்பத்திலிருந்து முன்னுக்கு பின் முரணான தகவல்கள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. சந்தேகத்தின் அடிப்படையில் எங்களது கட்சிக்காரர்களிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த வேண்டும் என அனுமதி கேட்டு இருக்கிறார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் மனைவி லதா ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையின் போது முரண்பட்ட தகவல்களை தெரிவித்து இருக்கிறார். இது ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தியாக வெளிவந்துள்ளது. ஆதலால் முதலில் லதா உள்பட ராமஜெயத்தின் குடும்பத்தினரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறி நாங்கள் மனு தாக்கல் செய்ய உள்ளோம் என்றார்.