பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் -கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும்

கோடை வெயில் சுட்டெரிப்பதால் பறவைகளுக்கு தண்ணீ்ர வைத்து புண்ணியத்தை தேடுங்கள் என சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்து உள்ளார்.

Update: 2022-04-01 08:20 GMT

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்குவதற்கு இன்னும் பல நாட்கள் இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே இந்த ஆண்டு வெயில் மண்டையை பிளக்கிறது.

வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் அடர்ந்த வனப்பகுதியை புகலிடமாக கொண்டுள்ள யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் கூட காட்டை விட்டை வெளியேறி நெடுஞ்சாலையை கடந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் வர தொடங்கி விட்டன. இதற்கு காரணம் என்ன? தண்ணீர் பற்றாக்குறை தான். காடுகளில் தண்ணீர் இல்லாததால் மிருகங்கள் ஊருக்குள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

மிருகங்களின் நிலை இப்படி என்றால் பறவைகள் என்ன செய்யும்? பறவை இனங்களில் பெரும்பாலானவை மனிதர்களாகிய நம்மை சார்ந்தே வாழ்ந்து வருகின்றன. அந்த பறவைகள் தற்போதைய வெயிலை தாங்க முடியாமல் தவித்து வருகின்றன. குளம் குட்டை நீர்நிலைகள் வறண்டு விட்டதால் அவற்றிற்கு தண்ணீர் வழங்கவேண்டியது நமது கடமையாகும்.

பறவைகளை காக்க திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் தம்பதியினர் தினமும் தங்களது வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில்

கோடை வெயில் என்றால் பலர் பகலில் வீட்டைவிட்டுக்கூட வெளியே வர மாட்டோம்.உஸ்... அஸ்.... என அலுத்துக்கொள்வோம்.அந்த அளவுக்குக் கோடை வெயிலின் தாக்கம் இருக்கும். காலநிலை மாற்றத்தால் வருடா வருடம் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. அதிகப்படியான வெப்பத்தாலும் தண்ணீர் தாகத்தாலும் சில நேரங்களில் உயிரிழப்புகள்கூட நடக்கிறது. வெயிலின் தாக்கம் கடந்த வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தமுறை அதிகமாக உள்ளது. மனிதர்களால்கூடத் தாங்க முடியாத வெப்பம் சின்னஞ்சிறு பறவைகளை மட்டும் எப்படி விட்டுவைக்கும். இந்த கோடை வெயிலின் தாக்கம் பறவைகள், விலங்குகளின் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது.


உணவில்லாமல் கூட வாழலாம். ஆனால் நீரின்றி வாழ முடியாது. அவ்வகையில் பறவைகளை காப்பாற்றுவதற்கான சிறிய முயற்சிகள் தான் பறவைகளுக்குத் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் தொட்டி வைத்துள்ளோம்."நீர் இல்லாமல் பல பறவைகள் தண்ணீர் தேடி அலைவதை நாங்கள் நேரடியாகப் பார்க்கிறோம். காகம், மைனா, சிட்டுக்குருவி, தவிட்டுக் குருவி போன்றவை குடி நீர் அருந்துகின்றன.

பறவைகள் மூழ்கி குளித்து உடல் சூட்டைத் தணித்துக் கொள்ளும் வகையில் தண்ணீர் தொட்டி அமைத்து உள்ளோம். தண்ணீர் தொட்டியினை தினசரி தூய்மை செய்து ஒவ்வொரு நாளும் புதிதாக தண்ணீர் நிரப்பி வருகிறோம்.

கோடை வெப்பம், அனைத்து உயிர்களையுமே தாக்கக்கூடியது. அதையுணர்ந்து நாம் நமக்குத் தேவையான தற்காப்புகளைச் செய்துகொள்கிறோம். விலங்குகளும் அவற்றுக்குத் தகுந்தவாறு தகவமைப்பு முறைகளைக் காலம் காலமாகக் கையாண்டு வந்தன. தற்போதும் அவை அதையே செய்கின்றன.

ஆனால், அதற்குத் தேவைப்படும் அளவுக்குப் போதுமான வாழிடத்தையோ வளங்களையோ நாம் விட்டுவைக்கவில்லை. இவ்வுலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல பல் உயிர்களுக்கும் தான். அந்தக் கடமையை உணர்ந்து, பறவைகளின் உயிரைக் காக்கச் சிறிய முயற்சிகளை மேற்கொண்டு உள்ளோம்.

சிலர் வீடுகளின் முன் தொட்டி அமைத்து பசு மாடுகளுக்கு கழனி உள்ளிட்ட வீட்டில் தேவை இல்லாத நீரை வழங்குவதை அன்றாடம் பார்க்கிறோம் எதற்காக? பசுக்களுக்கு நீர் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும் என வேதம் கூறுகிறது. அதே புண்ணியத்தை பறவைகளுக்கு தண்ணீர் கொடுப்பதன் மூலமும் பெறுவோமாக என்றனர்.


Tags:    

Similar News