புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல் மாநகராட்சியாக அறிவிப்பு

புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல் நகராட்சிகளை மாநகராட்சியாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2024-03-15 08:53 GMT

முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தில் புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரப்பு உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போது சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் 20 மாநகராட்சிகள் உள்ளன. இந்த 21 மாநகராட்சிகளிலும் மேயர்கள் துணை மேயர்கள் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவி வகித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மிகவும் பழமையான நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு நகரங்களில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக அந்தந்த  நகராட்சிகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தின் மிகவும் பழமையான நகராட்சிகளில்  ஒன்றான புதுக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல் ஆகிய  4நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டு உள்ளார். மேலும் இவற்றை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் செயல்படுத்துமாறும்  அதிகாரிகளுக்கு ஆணை வழங்கி உள்ளார்.

நாளை தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு முன்னதாக இன்று தமிழகத்தின் முக்கிய 4நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை நகராட்சியானது நூற்றாண்டுகளை கடந்து சாதனை படைத்த ஒரு நகராட்சியாகும். தமிழக அரசின் அறிவிப்பு காரணமாக புதுக்கோட்டை மாநகர மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதே போல் திருவண்ணாமலை கோவில்நகரம் என்ற பெருமைக்குரியது. காரைக்குடி செட்டி நாடு அழைக்கப்பட்டு வருகுிறது. நாமக்கல் மிகப்பெரிய தொழில் நகரங்களில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News