உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
உடல் பருமனைக் குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.;
உடல் பருமனை குறைக்க மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் உயிரிழந்த புதுச்சேரி இளைஞர்
புதுச்சேரி முத்தியால் பேட்டையை அடுத்த டிவி நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இவர் மார்க்கெட்டிங் கமிட்டியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏமச்சந்திரன், எமராஜன் என இரட்டை மகன்கள் உள்ளனர். இதில், ஏமச்சந்திரன் பிஎஸ்சி ஐடி முடித்து விட்டு, டிசைனிங் பணியில் இருந்துள்ளார். எமராஜன் சித்தா (பார்மஸி) கான்டிராக்டில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், ஏமச்சந்திரன் 150 கிலோ உடல் பருமன் அதிகரித்து இருந்ததால், உடல் ரீதியான பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், உடல் எடை குறைப்பிற்கு ஆலோசனை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
உடலில் உள்ள கொழுப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் ஆலோசனை கொடுத்துள்ளனர். இதற்கு ரூ.4 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்ய ஏமச்சந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் காலை 9.30 மணி அளவில் அறுவை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, 10.15 மணியளவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, ஏமச்சந்திரன்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஏமச்சந்திரன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக தனது மகன் உயிரிழந்ததாக சென்னை சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.