அக்னிபத் திட்டம் எதிர்ப்பு போராட்டம்: சென்னையில் 2 முக்கிய சாலை மூடல்
அக்னிபத் திட்டம் எதிர்ப்பு போராட்டத்தால், முன் எச்சரிக்கையாக சென்னையில் 2 முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்த அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறுமாறு பீகார், உ.பி மாநிலங்களில் போராட்டம் வலுத்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. இதேபோல், தமிழகத்திலும் சில மாவட்டங்களில் அக்னிபத் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகம் அருகே ஆரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், மெரினாவில் கூடி போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மெரினா, தலைமைச் செயலகம் அருகே உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நேப்பியார் பாலத்தில் இருந்து ரிசர்வ் வங்கி அருகே உள்ள பாலம் வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கொடிமரம் இல்லம் சாலையில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் சாலை வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தில் சிலர் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துகின்றனர். இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகரில் 2 முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தனர்.