ஏலம் மூலம் வாங்கும் சொத்துக்கள்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஏலம் மூலம் வாங்கிய சொத்துக்களுக்கான விற்பனைச் சான்றிதழ்களை பதிவு செய்ய 11 சதவீத கட்டணம் வசூலிக்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-08-15 07:25 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தமிழகத்தில் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாததால், அடமானமாக வைக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் மூலம் வாங்கியவர்கள், அதற்காக வழங்கப்பட்ட விற்பனைச் சான்றிதழை பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்ய விண்ணப்பித்து இருந்தனர்.

அதில் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. சிலரின் விற்பனை சான்றை பதிவு செய்ய 7 சதவீத முத்திரைத்தாளும், 4 சதவீத பதிவுக் கட்டணமும் வசூலிக்கப்பட்டன. பதிவு செய்யக் கோரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும், சில விண்ணப்பங்கள் மீது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை எதிர்த்தும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திரும்ப வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், தீர்ப்பை தள்ளிவைத்திருந்த நிலையில், ஏலம் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்கான விற்பனைச் சான்றிதழை பதிவு செய்ய முத்திரை தாள் கட்டணம் செலுத்தும்படி நிர்பந்திக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், பதிவு செய்வதற்காக 11 சதவீத கட்டணம் வசூலிப்பது என அரசு முடிவெடுத்து கடந்த மார்ச் 23 ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணங்களை நேரடியாக வசூலிக்க முடியாததால், சான்றிதழை பதிவு செய்வதற்கான கட்டணம் என மறைமுகமாக 11 சதவீத கட்டணம் வசூலிக்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதி, இதை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் மனுதாரர்களின் விற்பனைச் சான்றிதழ்களை கட்டணம் செலுத்தும்படி நிர்பந்திக்காமல் பதிவு செய்ய வேண்டும் எனவும், பதிவு செய்வதற்காக கூடுதலாக வசூலிக்கப்பட்ட முத்திரைத்தாள் கட்டணத்தை 6 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News