அரசுப் பள்ளிகளில் அலகு தேர்வு நடத்துவதில் சிக்கல்
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் ஸ்மார்ட் போன் வசதி இல்லாதவர்கள் அலகுத் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
தமிழ கத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் , மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி, இணைய வழியில் பாடங்கள் நடத்தப்படுகிறது. வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மற்றும் செயலிகள் வழியாக பாடங்கள் குறித்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விளக்கமளிக்கின்றனர். கொரோனா ஊடரங்கு கட்டுப்பாடுகளால் வீட்டிலிருந்து மாணவர்கள் கல்விகற்கின்றனர்.
இச்சூழலில் மாணவர்கள் கல்வி பயில்வதை உறுதி செய்யவது அவசியம். நேரடி கற்பித்தல் முறை தடைபடுவதால் புதிய வழிமுறைகளைப் பின் பற்றி ஆசிரியர்கள் இணைய வழியில் பாடங்களை நடத்த வேண்டும் . இதேபோன்று பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கூடுதல் பயிற்சியளிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதந்தோறும் அலகுத் தேர்வுகளை இணையவழியில் நடத்த வேண்டும். தேர்வுக்கான வினாத் தாள்களை மாவட்ட அல்லது வட்டார அளவில் ஆசிரியர்கள் மூலம் தயாரித்துக் கொள்ள வேண்டும். தேர்வு நாளில் மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் வழியாக மட்டும் வினாத்தாள்கள் அனுப்ப வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் , மெட்ரிக் பள்ளிகளில் 6 ம்வகுப்பு முதல் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலமாக அலகுத் தேர்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருசில மாவட்டங்களில் அலகு தேர்வு நடத்தி முடித்துள்ளனர். ஆனால் பல மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்பது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது . ஒரு குடும்பத்தில் இரண்டு மாணவர்கள் படிக்கும் போது 2 செல் போன்கள் தேவைப்படுகிறது. அவற்றை பெற்றோர்கள் வாங்கி கொடுப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது .
இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கிராமப்புறமாணவர்களே அதிகம் படிக்கின்றனர். இதில், பல மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வசதியின்றி அலகுத் தேர்வில் பங்கேற்பதில் சிக்கல் நிலவுகிறது. பல மாணவர்களுக்கு மொபைல் போன் இல்லாததால் அலகுத் தேர்வு என்பது பெயரளவில் மட்டுமே நடக்கிறது. மொபைல் போன் இல்லாத மாணவர்கள் தேர்வில் பங்கேற்க முடியாத நிலையில் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்படும் அச்சம் உள்ளது. பள்ளிகள் திறந்து நேரடி முறையில் தேர்வு நடத்துவதே சாத்தியமானதாகும். மலைக்கிராமங்களில் செல்போன் டவர் பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் வீட்டை விட்டு நீண்ட தூரத்தில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசுதான் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் .