பிரதமர் நரேந்திர மோடியின் நாளைய பயணத் திட்டம்
தமிழ்நாட்டில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க, நாளை வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத் திட்டம் வெளியாகியுள்ளது.;
பிரதமர் மோடி (பைல் படம்).
சென்னை விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடம், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவை, தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை விரைவு ரயில் சேவை ஆகியவற்றையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி தமிழக வருகிறார். இதேபோல திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி முடிக்கப்பட்டுள்ள அகலப்பாதையை துவக்கி வைக்க உள்ளார்.
இதையடுத்து டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம், நாளை பிற்பகல் 2.30 மணி அளவில் சென்னை விமானம் நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன விமான நிலைய முனையத்தை அவர் பார்வையிடுகிறார். பின்னர் இந்தியா விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு செல்லும் பிரதமர், அங்கிருந்து கார் மூலம் மாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறார்.
அங்கு, சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர், மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
பின்னர், ஹெலிகாப்டர் மூலம் பல்லாவரத்தில் உள்ள ராணுவ மைதானத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, மாலை 6.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை முறைப்படி திறந்து வைக்கிறார். விழாவை முடித்து விட்டு, இரவு 8.45 மணியளவில் தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மைசூர் புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் 22,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், பல்லாவரம் கிரிக்கெட் மைதானம் உட்பட பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது