போலி பத்திரப் பதிவுகளை ரத்து செய்ய மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம்: ஐகோர்ட் பாராட்டு

போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கி தமிழ்நாடு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Update: 2023-02-18 15:00 GMT

பைல் படம்.

சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமாக 2,400 சதுர அடி வீட்டுமனை உள்ளது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் இறந்த நிலையில், ஏழு மாதங்களுக்கு பிறகு, போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து அந்த நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர்.

இந்த விவகாரம் சலபதியின் வாரிசுகளுக்கு தெரியவந்ததை அடுத்து, இதுசம்பந்தமாக சென்னை தெற்கு மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையில், போலி பத்திரப்பதிவு குறித்து புகார் வந்தால் அதை விசாரித்து போலி என்பது கண்டறிந்தால், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய பதிவு அதிகாரிக்கு உத்தரவிட மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்த இந்த சட்டத்திருத்ததின்படி, சலபதியின் வாரிசுகள் மீண்டும் புகார் அளித்தனர். அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், போலி பொது அதிகார பத்திரத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி சலபதியின் மகன் சுதாகரராவ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் முதலில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை துவங்கப்பட்டு விட்டதாகவும், சட்டத்திருத்ததுக்கு பின் அளித்த இரண்டாவது புகாரின்படி, விசாரணை நடத்தி உரிய காலத்தில் முடிவெடுக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சொத்துக்கள் மோசடியாக எப்படி அபகரிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, இதுபோன்ற செயல்களை தடுக்க உயர்நீதிமன்ற யோசனைப்படி, நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு அரசு, போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கி சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். மேலும், மனுதாரரின் புகார் குறித்து விசாரித்து எட்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மாவட்ட பதிவாளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags:    

Similar News