ரத்தாகிறதா +1 பொதுத் தேர்வு?

நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது

Update: 2023-06-10 14:06 GMT

பைல் படம்

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத்தேர்வு இருந்தது. ஆனால் ஆண்டுதோறும் 11ஆம் வகுப்புக்கும்  தற்போது பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. காரணம் சில தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்புகள் நடத்தாமலேயே 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் படுத்துவதாகவும், இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதாகவும் சர்ச்சை எழுந்தது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு, அதன்படி நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து மூன்று பொதுத்தேர்வுகளை எழுதுவதால் மாணவர்கள் சோர்வு அடைவதாலும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவு எதிரொலியாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவலால் ஆசிரியர்களும், மாணவர்களும் மிகுந்த குழப்பத்தில் இருந்தனர். ஆனால் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலில் உண்மை இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் தேர்வு ரத்து தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் அரசு மேற்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது. 

Tags:    

Similar News