கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: கைதான 7 பேருக்கு மீண்டும் போலீஸ் காவல்

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 7 பேரை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

Update: 2023-02-02 07:44 GMT

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் இதுவரை 11 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்களில் 5 பேரை கடந்த ஜனவரி மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள், காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக மீண்டும் 7 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், கைதான முகமது அசாரூதீன், பைரோஸ், நவாஸ், அப்சர் கான், முகமது தவ்பீக், சேக் இதயதுல்லா, சனோபர் அலி ஆகிய ஏழு பேரையும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

மேலும் போலீஸ் காவல் முடிந்து வருகிற 8-ம் தேதி மீண்டும் ஏழு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து 7 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சென்னை, கோவை, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 7 பேரையும் அழைத்து சென்று விசாரணை செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News