55 பேர் உயிரிழப்புக்கு பிறகு ‘விழித்துக்கொண்ட’ தமிழக போலீஸ்; 876 சாராய வியாபாரிகள் கைது
Police investigating counterfeit liquor- 55 பேர் உயிரிழப்புக்கு பிறகு, தூக்கம் கலைந்து விழித்துக்கொண்ட போலீஸ், தமிழகத்தில் இதுவரை 876 சாராய வியாபாரிகள் கைது செய்து, 4657 லிட்டர் சாராயத்தை கைபற்றி அழித்துள்ளது.
Kallakurichi incident, Police investigating counterfeit liquor- கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்கள். அதைப் போல, தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விஷச் சாராயமாக மாறி, 55 பேர் உயிரை பறித்த பிறகு, தூக்கம் கலைத்த போலீசார், 3 நாட்களில் 876 சாராய வியாபாரிகளை கைது செய்து, நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நோய் வருமுன் தடுப்பவன், புத்திசாலி; நோய் வந்த பின் தவிப்பவன் ஏமாளி என்ற பொன்மொழிக்கு ஏற்ப, வருமுன் காப்போம் என்ற மருத்துவ திட்டத்தை தமிழக அரசுதான் செயல்படுத்தி வருகிறது. ஆனால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளில் மட்டும் எப்போதுமே, பெரிய அளவில் தகாத சம்பவங்கள் நடந்த பிறகுதான் அதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்கிறது. வருமுன் எப்போதுமே சுதாரிப்பது இல்லை.
அரசு இயந்திரமும் துரிதமாக செயல்படுகிறது. ஆனால் அதுவும் சில மாதங்களுக்கோ, சில ஆண்டுகளுக்கோ தான். மக்கள் மறந்து விட்டால், அதன்பிறகு அதிகாரிகளும், அரசாங்கமும் வெகு சுலபமாக மறந்து போகும். அதுதான் காலம் காலமாக தமிழக அரசியல் வரலாற்றில் நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் வீதிக்கு வீதி டாஸ்மாக் மதுக்கடைகளை அரசே திறந்து வைத்திருக்கிறது. பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை அங்கு ஜோராக மதுபான விற்பனையும் நடக்கிறது. மதுக்கடையில் ஏதேனும் பிரச்னை என்றால், அடுத்த சில நிமிடங்களில் அங்கு போலீசார் ஆஜராகி, சட்டம் ஒழுங்கை காப்பாற்றி, மதுபான விற்பனை எந்தவிதமான தங்கு தடையும் இல்லாமல், சீரும் சிறப்புமாக நடக்க துரித நடவடிக்கை எடுக்கின்றனர்.
ஏனெனில், அரசின் இயந்திரம் தடையின்றி சுழல, இங்கு அச்சாணியாக இருக்கும் முக்கிய வருமான துறைகளில் ஒன்றாக டாஸ்மாக் மதுபான விற்பனையும் இருக்கிறது. அதிமுக, திமுக எந்த கட்சி தமிழகத்தில் அரியணை ஏற்றி ஆட்சியில் அமர்ந்தாலும், பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த முன்வர மாட்டார்கள். ஏனெனில், தினசரி ‘குடி’ மகன்கள் வாயிலாக கிடைக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை இழந்துவிட்டால், எப்படி அரசை அவர்களால் நிர்வகிக்க முடியும், எப்படி பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை அறிவித்து அதில் நூற்றுக்கணக்கான கோடிகளை பணத்தை அமைச்சர்களும், சுருட்ட முடியும் என்ற கேள்வியில் அது நிற்கிறது.
மக்களை சிந்திக்க விடாமல் போதைக்கு அடிமையாக்கி, அவர்கள் எப்போதுமே தன்னிலை மறந்துவாழும் ஒரு நிலைக்கு தள்ளும் அரசு, அது மக்களுக்கான அரசாக எப்போதுமே இருக்க முடியாது. மக்களுக்கு போதையில்லாத அமைதியான வாழ்க்கை சூழலை, போதையற்ற சமுதாயத்தை உருவாக்கி தர முயற்சிக்காத, அதுபற்றி சிந்திக்காத இந்த திமுக, அதிமுக அரசுகள் இரண்டுமே மக்களின் போதையில்தான், தங்களது 5 ஆண்டுகால ஆட்சிகளை வெற்றிக்கரமாக ஒவ்வொரு முறையும் நிறைவு செய்வது, ஆட்சியாளர்களுக்கு தரும் அவமானமே தவிர, மக்களுக்கு அல்ல.
வீதிகள் தோறும் டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டு, அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒன்று கூடி நின்று, போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுக்கின்றனர். கையெழுத்து இயக்கும் நடத்துகின்றனர். இதற்கு தமிழக முதல்வரே தலைமை வகித்து உறுதிமொழியை வாசிக்கிறார். கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கும் இவர்கள், டாஸ்மாக் மதுக்கடைகளில் சர்பத், லெமன் ஜூஸ், ஆப்பிள் ஜூஸ்தான் விற்றுக்கொண்டு இருக்கிறார்களா, என்பதுதான் மக்களின் ஆச்சரியமான கேள்வியாக இருக்கிறது.
டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலை கொடுத்து குவாட்டர், ஹாப் பாட்டில்களை வாங்கி குடிக்க முடியாத கள்ளக்குறிச்சி போன்ற பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த கூலித்தொழிலாளிகளான அப்பாவி மக்கள், பாக்கெட் சாராயம் என்னும் மலிவு விலை கள்ளச்சாராயத்தை குடித்து, குடித்து அது விஷ சாராயமாக மாறி மாண்டு போகின்றனர். இப்போது 55 பேர் தங்களது இன்னுயிரை இழந்திருக்கின்றனர்.
மாவட்ட கலெக்டரை இடமாற்றியும், மாவட்ட எஸ்பியை சஸ்பெண்ட் செய்தும், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமும் அறிவித்த தமிழக அரசு, விஷ சாராயம் குடித்து உயிரிழந்த 55 பேருக்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு என ஒதுங்கிக்கொள்ள முடியுமா? முதல்வர், அவருக்கு கீழ் இருக்கிற அமைச்சர்களும் இதில் சரியான கடமை ஆற்றியிருந்தால், வருமுன் காப்போம் திட்டம் போல, கள்ளச்சாராயம் விற்பனையை ஆரம்பத்திலேயே தடுத்து, 55 பேரின் உயிரை காப்பாற்றி இருக்கலாமே? என்பதுதான் மக்களின் கேள்வியாக எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில், 55 பேர் பலியான பிறகு தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் குறித்த போலீஸ் வேட்டை ஆரம்பமாகி, 876 கள்ளச்சாராய வியாபாரிகள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக வடக்கு மண்டல காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் 861 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4657 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளது. சாராய வியாபாரிகள் மீதான தேடுதல் வேட்டை தொடரும் என்றும் தமிழக காவல் துறை அறிவித்துள்ளது.
இனி மீண்டும் ஒரு கள்ளக்குறிச்சி சம்பவம் நடக்காமல் தடுக்க, அரசும் காவல்துறையும் விழிப்புடன் இருப்பது மிக அவசியம். நாளடைவில் இது மந்தமானால், மீண்டும் இதுபோன்ற சம்பவங்களும், உயிரிழப்புகளும் தொடரவே செய்யும் என்பதை உணர்ந்து, இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று சொன்னதை, ஆட்சியாளர்கள் நிறைவேற்றிக் காட்ட வேண்டும்.
குறிப்பு; செய்தியில் இடம்பெற்ற அனைத்தும் கோப்பு படங்கள்.