காவல் துறைக்கு ரூ. 2.67 கோடியில் நவீன மீட்பு மற்றும் இழுவை வாகனங்கள்
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் துறைக்கு ரூ. 2.67 கோடி மதிப்பில் நவீன வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 20 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 12 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் மற்றும் 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், சென்னை பெருநகர காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 10 மீட்பு இழுவை வாகனங்கள் மற்றும் 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4 கடற்கரை ரோந்து வாகனங்களின் சேவைகளை முதல்வஸ் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள்:
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் சேலம் மாவட்டம் – ஆட்டையாம்பட்டி, திருப்பூர் மாவட்டம் – ஊத்துக்குளி, சிவகங்கை மாவட்டம் – இளையான்குடி, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – வையம்பட்டி, கடலூர் மாவட்டம் – குமராட்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் – நயினார்பாளையம், விழுப்புரம் மாவட்டம் – அன்னியூர், மதுரை மாவட்டம் – திருப்பரங்குன்றம், விருதுநகர் மாவட்டம் – ஏழாயிரம்பண்ணை, சென்னை மாவட்டம் – கொளத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் – காலவாக்கம், திருவண்ணாமலை – கண்ணமங்கலம் ஆகிய 12 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் திறக்கப்பட்டன.
மேலும், விருதுநகர் மாவட்டம் – சிவகாசி, ராணிப்பேட்டை மாவட்டம் – ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டம் – தாம்பரம், கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூர் ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களை தரம் உயர்த்தி மொத்தம் 20 கோடியே 13 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மீட்பு இழுவை வாகனங்கள்:
2022-2023 ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில், தெரிவித்தபடி சாலை பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்காக சென்னை பெருநகர காவல் துறைக்கு 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக 5 புதிய நான்கு சக்கர மீட்பு இழுவை வாகனங்களும், 5 புதிய இருசக்கர மீட்பு இழுவை வாகனங்களும் என மொத்தம் 10 மீட்பு இழுவை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை பெருநகர காவல் துறையில் போக்குவரத்துக் காவல் பிரிவில் இயங்கிவரும் மீட்பு இழுவை வாகனங்கள் போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்துவதிலும் சாலையில் இடையூராக நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி சாலை பயன்பாட்டாளர்கள் தடையின்றி செல்வதற்கும்இ சாலைகளில் விபத்துக்கள் ஏற்படும் போது சேதமடைந்துஇ இயங்கமுடியாத நிலையிலுள்ள வாகனங்களை துரிதமாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீராக்குவதற்கும் உதவி புரிகிறது. மேலும்இ சாலைகளில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அங்கிருந்து அகற்றுவதுடன் அதன் உரிமையாளர்களுக்கு சட்டப்படி அபராதம் விதிப்பது மற்றும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
கடற்கரை ரோந்து வாகனங்கள்:
சென்னை பெருநகர காவல் துறையினரின் கடற்கரை ரோந்து மற்றும் சுற்றுக்காவல் பணிக்காக கடற்கரை ரோந்து வாகனங்கள் வாயிலாக மெரினா கடற்கரை, அண்ணாசதுக்கம் மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை ஆகிய இடங்களில் பாதுகாப்பு ரோந்து மற்றும் குற்றச் சம்பவங்கள் ஏதும் நடக்காமல் தடுப்பதற்காக பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து பணி செய்து வருகின்றனர்.
இந்த வாகனங்கள் அந்தந்த காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. கடற்கரை ரோந்துப் பணியை சிறப்பாக மேற்கொள்வதற்காக 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு புதிய கடற்கரை ரோந்து வாகனங்கள் சென்னை பெருநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் மூன்று வாகனங்கள் சுற்றுக் காவல் பணிக்கும், ஒரு வாகனம் சுற்றுக் காவல் மற்றும் கடல் அலைகளில் சிக்கிக்கொண்டவர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு துரிதமாக சிகிச்சைக்கு கொண்டு செல்லக் கூடிய பணிக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் மணல் பரப்பில் வேகமாக செல்லும் வகையில் நான்கு சக்கர இயக்கியால் இயங்கக்கூடியது ஆகும். ஒலிபெருக்கி வசதியுடன் இவ்வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் குற்றச்செயல்கள் நடவாமல் தடுத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குற்றவாளிகள் யாரேனும் கூட்டத்தில் இருந்தால் FRS செயலி மூலம் அவர்களை கண்டறிந்து குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பண்டிகை தினங்களில் கடற்கரையில் அதிகப்படியான கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் விழிப்புடன் சுற்றுக்காவல் பணி மேற்கொள்ளவும் இவை உதவிகரமாக இருக்கும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.