பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்கு: கைது செய்ய நடவடிக்கை

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்கு செய்து இருப்பதால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-01-30 12:42 GMT

யூடியூபர் சவுக்கு சங்கர்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையை சேர்ந்தவர் சவுக்கு சங்கர். முன்னாள் தமிழக காவல் துறை அதிகாரியான  இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். தமிழக அரசியல், இந்திய அரசியல், உலக அரசியல் மற்றும் சமுதாய சீரழிவுகள் பற்றி இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவுகள் செய்வது உண்டு. மேலும் அரசியல் விவாதங்களையும் தனது யூடியூப் சேனல் மூலம் நடத்தி வருகிறார். பெரும்பாலும் இவரது பதிவுகள் தி.மு.க. அரசுக்கு எதிரான மனநிலையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு க ஸ்டாலின், அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பற்றி நிறைய யூடியூப் வீடியோக்கள் மற்றும் விவாதங்கள் குறித்த வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். இவரை பாலோ செய்பவர்கள் சமூக வலைத்தளத்தில் லட்சக்கணக்கானவர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைய உள்ள பசுமை விமான நிலையத்திற்கு எதிராக அங்குள்ள மக்கள் ஓராண்டு காலத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு ஆதரவாகவும் சவுக்கு சங்கர் யூடியூப்  மூலம் ஏற்கனவே பதிவுகள் வெளியிட்டிருந்தார். கடந்த 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்காக சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் சிலர் சென்றிருந்தனர். அப்போது அவர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் போலீசாருக்கும் அவருக்கும் சில இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது போலீசாரை பணி செய்ய விடாமல்  தடுத்தது உள்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது சுங்குவார் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News