டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்ய வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்...
டிஎன்பிஎஸ்சி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு பல்வேறு அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இதற்கான போட்டித் தேர்வுகள் பணிகளுக்கு ஏற்றவாளு பல்வேறு நிலைகளில் நடத்தப்படுவது உண்டு.
இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் 5,446 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய தேர்வுகள் நடைபெற்றன. அந்த முதல் நிலை தேர்வு எழுதியவர்களில் 57,641 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது அவர்களுக்கான முதன்மை தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்வு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் 280 தேர்வு மையங்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை தமிழ் தேர்வும், பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை பொதுத்தேர்வும் நடைபெறுகிறது.
இதில் மொத்தம் 55,071 பேர் தேர்வு எழுதுகின்றனர். ஆண்கள் 27, 306 பேரும், பெண்கள் 27, 764 தேர்வு எழுதுகின்றனர். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வும், நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளுக்கு தேர்ச்சி அடிப்படையிலும் பணி வழங்கப்படும்.
இதற்கிடையே, தமிழகத்தில் சில மாவட்டங்களில் குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருந்ததால் குறித்த நேரத்துக்கு தேர்வு தொடங்காமல் வினாத்தாள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், தாமதமாகத் தேர்வு தொடங்கிய மையங்களில் கூடுதல் நேரம் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
அன்புமணி ராமதாஸ் கண்டனம்:
இந்த விவகாரம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:
தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தொகுதி 2-க்கான முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாக தொடங்கி உயுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறி இருந்ததுதான் இந்தக் குழப்பத்திற்கும், தாமதத்திற்கும் காரணம் ஆகும்.
பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்டு உள்ளது. இதன்மூலம் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகிவிட்டது. டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம்.
போட்டித் தேர்வுகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சமவாய்ப்பும் இல்லை, மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை.
சமவாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது. எனவே, இன்றைய தேர்வை உடனடியாக ரத்து செய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்துவிட்டு, வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இந்தத் தேர்வை டிஎன்பிஎஸ்சி மீண்டும் நடத்த வேண்டும் என அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.