மே 7-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதிக்கு பதில், மே 7-ம் தேதி மாலை அல்லது 8 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 3ம் தேதி நிறைவடைந்தது. இதற்கான முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதனால் தேர்வு முடிவுகளை வேறு தேதியில் அறிவிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ், ”மே 7ம் தேதி நீட் தேர்வு நடைபெறுகின்றது. ஏற்கனவே திட்டமிட்டபடி மே 5ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட்டால், மாணவர்களின் மனம் பாதிக்கப்படலாம் என்பதால், நீட் தேர்வுக்கு பிறகு 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும். மே 7 ம் தேதி மாலை அல்லது மே 8 ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளது. முதலமைச்சருடன் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு, பின்னர் தேதி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.