பிச்சைக்காரன்-2 படத்துக்கு மீண்டும் சிக்கல்: நீதிமன்றத்தில் வழக்கு
நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது.
தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, அவர் நடித்த பிச்சைக்காரன் படம் பெரும் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது பிச்சைக்காரன் 2 படம் எடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த ராஜ கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மாங்காடு மூவீஸ் தயாரிப்பில், பாண்டியராஜன் நடிப்பில் மூளை என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம், ஆய்வுக்கூடம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், மூளை மாற்று அறுவை சிகிச்சையை கதைக்கருவாக கொண்ட ஆய்வுக்கூடம் படத்தின் கதை மற்றும் திரைக்கதையை காப்பியடித்து "பிச்சைக்காரன் 2" படம் எடுக்கப்பட்டு உள்ளதால், திரையரங்கு மற்றும் ஓடிடி தளங்களில் அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ராஜ கணபதி கோரிக்கை வைத்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து விஜய் ஆண்டனி பிலிம் காப்பரேசன் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 18 ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் பரணி என்ற உதவி இயக்குநர் தொடர்ந்துள்ள வழக்கில், தான் அஜித் நடித்த சிட்டிசன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார். பிச்சைக்காரன் 2 படத்தின் மூலக்கதை தன்னுடைய கதை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் கூறியிருந்த தாக சுட்டிக் காட்டி இருக்கும் பரணி, அதே கதையை தற்போது பிச்சைக்காரன் 2 என்ற பெயரில் விஜய் ஆண்டனி தயாரித்து உள்ளதாகவும், எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு ஏப்ரல் 18 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கெனவே, பிச்சைக்காரன்-2 திரைப்படத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ள நிலையில், மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டு உள்ளதால், பிச்சைக்காரன்- 2 திரைப்படத்துக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.