ஷாக் ஆகாதிங்க...! நீண்டஇடைவெளிக்கு பின் பெட்ரோல், கேஸ் விலை உயர்வு
சுமார் நான்கரை மாதங்களுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது; இது, வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
இந்தியாவில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சந்தை நிலவரத்திற்கேற்ப, இங்கு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், கடந்த 137 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை, இந்தியாவில் மாற்றமின்றி விற்பனையாகி வந்தது.
அதன்படி, இதுவரை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வந்தது. ஆனால், 137 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து 102.58 ஆகவும், டீசல் 77 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 92.65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது, மற்ற மாவட்டங்களில் சிறிது மாறுபடலாம்.
சமையல் எரிவாயு விலை உயர்வு
இதேபோல், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஐந்து மாதங்களுக்கு பிறகு இன்று விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று, சென்னையில் ரூ. 50, உயர்ந்து ரூ.967, ஆக உயர்ந்துள்ளது.
இது இல்லத்தரசிகளுக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, மொத்த விற்பனையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 உயர்ந்த நிலையில், தற்போது பெட்ரோல், சமையல் காஸ் விலை உயர்வு அமலாகி உள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கிய போதுகூட பெட்ரோல் - டீசல் விலை உயராத நிலையில், தற்போதையை விலையேற்றம், வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.