தமிழகத்தில் மக்கள் போராட்டம் வெடிக்கும்- எடடிப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
தமிழகத்தில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என எடடிப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.;
திருச்சியில் நடந்த கண்டன கூட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சொத்து வரி உயர்வை கண்டித்தும், அ/தி.மு.க.அரசின் திட்டங்களை தி.மு.க. செயல்படுத்தாததை கண்டித்தும் திருச்சி ஜங்ஷன் அருகில் இன்று மாபெரும் அ.தி.மு.க. கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது
தமிழகத்தில் நடந்து வரும் தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத அரசு. தேர்தல் காலத்தில் முக.ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தேர்தலுக்கு முன்பாக ஊர் ஊராகப் போய் மனுக்களை வாங்கினார் ஸ்டாலின். அந்த மனுக்கள் மீதான நடவடிக்கை என்ன ஆனது? மனுக்கள் பெட்டியின் சாவி தொலைந்து போய் விட்டதா?.
இப்போது சொத்து வரியை உயர்த்தி இருக்கிறார்கள். அதற்கு காரணம் மத்திய அரசுதான் என்று மத்திய அரசு மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். சொத்து வரி உயர்த்தப்பட்டதை தி.மு.க. அரசு திரும்பப் பெறவில்லை என்றால் தமிழ்நாட்டில் மக்கள் போராட்டம் வெடிக்கும். இது உறுதி. இரட்டை வேடம் போடுவதிலும் கபட நாடகம் ஆடுவதிலும் தி.மு.க. எப்போதும் பின்தங்கியது இல்லை. அதே வேலையைத்தான் இப்போதும் செய்கிறது.
தமிழகத்தில் தற்போது கொலை, கொள்ளை, கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. தி.மு.க. அரசு மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். பத்துமாத தி.மு.க. ஆட்சியில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் எம்.பி. டி. ரத்தினவேல் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.