மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள்: ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை துண்டாக வெட்டினாலும் மக்கள் வேறு சின்னத்திற்கு ஓட்டு போட மாட்டார்கள். இரட்டை இலைக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்,”அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமியை எதிர்த்து நிற்பவர்களும் இரட்டை இலையை அடையாளமாக பெற்ற அந்த சின்னம், எங்களுக்கு களம் பிரகாசமாக உள்ளது.
எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உறுதி. எத்தனை வாக்கு வித்தியாசம் என்பதை தான் நாங்கள் பார்க்க வேண்டும். எங்களை எதிர்த்து நிற்பவர்களுக்கு பயம் வந்துவிட்டது. வேட்புமனு தாக்கல் செய்யும் போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே செல்கின்றனர். ஓட்டு கேட்கும் போதே கேட்டை உடைத்து கொண்டு உள்ளே செல்பவர்கள், ஓட்டு வாங்கிய பின் எந்த கேட்டை உடைப்பார்கள் என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு வேட்பாளர் வேட்புமனுவை வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டாராம், இரட்டை இலையில் வெற்றி பெற்றவர், இரட்டை இலையில் மாவட்ட செயலாளராக இருந்தவர், இரட்டை இலையில் தான் இந்த பகுதிக்கு அறிமுகம் ஆனவர். இப்போது தீடீரென போக வேண்டும் என்றால் வேட்புமனு பேப்பர் கூட அவர் கூட வர மறுக்கிறது. இரண்டு வேட்பாளர்களும் எங்க இருக்காங்க என தேடும் நிலையே உள்ளது.
தினசரி ஆரவாரத்துடன் வாக்கு சேகரித்து வருகிறோம். வேட்பாளர் செல்வதை போல எத்தனை ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டுக்கு விலை பேசினாலும். விரலை துண்டாக வெட்டினாலும் வேறு சின்னத்திற்கு போட மாட்டார்கள். இந்த மக்கள் இரட்டை இலைக்கு தான் போடுவார்கள்.
அம்மா உயிரை கொடுத்து உருவாக்கிய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரிய போது இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து ஓட்டு போட்டவர் ஓபிஎஸ். இருந்த போதும் எங்களிடம் சரணாகதி அடைந்த போதும் மிக உயர்ந்த பொறுப்பை கொடுத்து, ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் என பதவியை கொடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி. 2021 ஆம் ஆண்டு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அவர் தான் முன்மொழிகிறார்.
ஆனால், அதற்குரிய பணிகள் செய்யாமல் துரோகம் செய்ததால் பொதுக்குழுவில் முடிவெடுத்து, தீர்மானம் நிறைவேற்றி இரண்டு கோடி தொண்டர்களும் கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். இப்போது அவர் வந்து இரட்டை இலையை எதிர்த்து நிற்பபதை எந்த வகையில் நியாயம் என ஏற்றுக் கொள்வது?
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்., இவர்களுக்கு தோல்வி பயம் வந்ததால் அதை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்., அவர் நாடகத்தை அரங்கேற்றி வருவதை மக்களும், தொண்டர்களும் நம்ப தயாராக இல்லை என்று கூறினார்