விஜயகாந்த் உடலுக்கு மக்கள் இறுதி அஞ்சலி: கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறல்
விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறி வருகிறது.
விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால் மக்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலை உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் போதிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு கொண்டுவரப்படுவதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து காலை முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். அப்போது முன்வாசலில் குவிந்திருந்த தொண்டர்களுக்கு போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் தக்க அறிவுறுத்தல்களை வழங்கி கட்டுக்குள் வைத்திருந்தனர்.
தேமுதிக கட்சித் தலைமையகத்தின் வாயிலில் இருந்து தொண்டர்கள் அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிற்பகல் 1.30 மணியளவில் விஜயகாந்தின் உடல் தலைமையகத்துக்கு முக்கியப் பிரமுகர்கள் வரும் வழியில் கொண்டு வரப்பட்டது. அதுவரை கட்டுக்குள் இருந்த தொண்டர்கள், முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றனர். அவர்களைக் கட்டுப்படுத்துவது போலீஸாருக்கு மிகுந்த சவாலாகவே இருந்தது. தொடர்ச்சியாக பலமுறை தள்ளு முள்ளு ஏற்பட்டது. முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் வழியிலும் தொண்டர்கள் நுழைய முயன்றபோதும் போலீசார் கட்டுப்படுத்தினர்.
தொண்டர்கள் முண்டியடிப்பதும், போலீஸார் கட்டுப்படுத்துவதும் என இரவு வரை இதே நிலை நீடித்தது. மிகப்பெரிய தலைவருக்கு குறுகிய இடத்தில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது வேதனையளிப்பதாக தொண்டர்கள் தெரிவித்தனர். மேலும், ஆண்களுக்கு இணையான அளவில் அஞ்சலி செலுத்த குவிந்த பெண்களும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர். அதே நேரம், இறுதியாக தங்களது கேப்டனை அருகில் பார்க்க முடியவில்லை எனவும் தொண்டர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அஞ்சலிக்குப்பின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருக்கும் தேமுதிக அலுவலகத்துக்கு வெளியே நிற்கிறார்கள்.
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு சிரமப்பட்டு வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இரு கைக்கூப்பி தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம்.
தமிழகம் முழுவதும் இருந்து வரும் தொண்டர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக ராஜாஜி அரங்கத்தில் விஜயகாந்த் உடலை வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். நாளை (இன்று) பாஜக மூத்த தலைவர்களும் வர இருக்கிறார்கள்.
எனவே, பெரிய அளவு கூட்டம் கூடும் என்பதால், முதல்வர் ஸ்டாலின் எங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து, பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் விஜயகாந்த் உடலை வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜயகாந்த் உடலுக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்த போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் நெரிசலில் மக்கள் சிக்கி அவதிக்குள்ளாயினர். இதன் காரணமாக தற்போது விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தீவுத்திடலில் இருந்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் இன்று இறுதி சடங்கு நடைபெறுகிறது.
இதனிடையே விஜயகாந்த்தின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் வைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.