வேப்பூரில் வெட்டப்பட்ட 60க்கும் மேற்பட்ட பனைமரங்கள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
வேப்பூரில் நெடுஞ்சாலை ஓர அரசு நிலத்தில் 60க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.;
கடலூர் மாவட்டம், வேப்பூரில் நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு நிலத்தில் 60க்கும் மேற்பட்ட பனைமரங்கள் வெட்டப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பனைமரங்களின் நன்மைகள் குறித்து பல்வேறு சமூக அமைப்புகள் விழிப்புணர்வு மற்றும் பனைமரங்கள் நடவு ஆகியவற்றை செய்து வருகிறது. கடந்த சுனாமியின்போது பனைமரங்களால் பேரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் மூலம் நாம் அறிகிறோம். இதற்காக தமிழக அரசும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வயல்கள், கண்மாய் கரையோரம் வளர்க்கப்பட்ட பழமையான அழிவின்விளிம்பில் உள்ள பனைமரங்கள் அனைத்தும் அதிகளவில் வெட்டியெடுக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட லாரிகளில் தினமும் செங்கல் காளவாசல்களுக்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்க சுற்றுசூழல் பாசறையும், இளைய பாரதம் அமைப்பும் இணைந்து ஆழ்வார்குறிச்சியில் அறிவிப்பு பலகை வைத்தது. மேலும் இதனை தடுக்க வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது.
பிரதமர் மோடியும், இயற்கையை பாதுகாப்பதில் தூத்துக்குடி மக்கள் முன்னோடியாக உள்ளனர் என்றும், கடல் பகுதிகளில் உள்ள சிறிய தீவு திட்டுகளில் மக்கள் பங்களிப்புடன் நடந்த பனைமரங்கள் நடும் திட்டத்தை மேற்கோள் காட்டி மான்கிபாத் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
இந்த நிலையில் பனைமரங்கள் திருட்டுத் தனமாக வெட்டப்படுவது அதிகரித்து வருவது வேதனையை அளிக்கிறது. இதற்கு பாமக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடலூர் மாவட்டம், வேப்பூரில், நெடுஞ்சாலையின் ஓரத்தில் ஓடைக் கரையில் அரசு நிலத்தில் வளர்க்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் திருட்டுத் தனமாக வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் எதிரான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதன் நோக்கம் மரங்களை திருடுவது அல்ல. அதை விட தீய நோக்கம் கொண்டது ஆகும். நெடுஞ்சாலையை ஒட்டிய நிலத்தின் மதிப்பைக் கூட்டுவதற்காக ஒரு நில வணிக நிறுவனம் தான் அதிகாரிகளின் துணையுடன் பனை மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளது.
மரங்கள் வெட்டப்பட்டால் அதையொட்டி ஓடும் ஓடையை மூடி நிலத்தை நெடுஞ்சாலையுடன் இணைத்து விடலாம்; ஓடையை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டலாம் என்பது தான் நில வணிக நிறுவனத்தின் நோக்கம். அதை அனுமதிக்கக்கூடாது. அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர வேண்டும்.
நெடுஞ்சாலையோரம் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் வெட்டப்பட்டதை விட 10 மடங்கு மரங்களை கூடுதலாக நடுவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஆணையிட வேண்டும். அவற்றை வளர்ப்பதற்கான பராமரிப்பு செலவுகளை சம்பந்தப்பட்ட நில வணிக நிறுவனத்திடமிருந்து வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.