தடை கேட்கும் ஓபிஎஸ்.. என்னை கேட்காமல் தடை விதிக்க கூடாது என கூறும் இபிஎஸ்...
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட அனுமதிக்கக் கூடாது என ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், இபிஎஸ் தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்து உள்ளனர்.;
அதிமுக தொடர்பான வழக்கில் கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை கோரி ஒ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், தடைவிதிக்கக் கோரியும் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் உடனடியாக முறையீடு செய்தனர். அந்த மனுக்களை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் தரப்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமியும், மனோஜ் பாண்டியன் சார்பில் வழக்கறிஞர் இளம்பாரதியும் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது என்றும், கட்சி விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளனர்.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கோரும் இந்த மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் வரை அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைவிதிக்க வேண்டும் என்றும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோல, வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் நாளை காலை மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இபிஎஸ் கேவியட் மனு தாக்கல்:
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களில் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொது குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் இபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இபிஎஸ் சார்பில் வழக்கறிஞர்கள் கௌதம்குமார், பாலமுருகன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்து உள்ளனர். நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மற்றும் இபிஎஸ் கேவியட் மனு ஆகியவை 39 ஆவது வழக்காக பட்டியலிடப்பட்டு உள்ளது.