இன்றிரவு டெல்லிக்கு செல்லும் ஓபிஎஸ்: அடுத்தது என்ன?
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று இரவு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார்.
பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆவேசமாகப் பேசியதோடு, ஒற்றைத் தலைமை விவகாரம் பற்றி முடிவெடுக்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக குரல் எழுப்பினர்.
இதையடுத்து, ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவிக்கவே, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் இன்று இரவு ஒன்பதரை மணி அளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார். இன்று இரவு 9.05 மணி விஸ்தாரா ஏா்லைன்ஸ் விமானத்தில் அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வழக்கறிஞர் ஆகியோரும் செல்கின்றனர்.
ஒற்றை தலைமை சர்ச்சை குறித்து உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் முறையீடு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை காலை டெல்லி தோ்தல் ஆணையத்தில் புகாா் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.