பொதுக்குழு மேடையில் இருந்து ஓ.பி.எஸ் கோபமாக பாதியில் வெளியேறினார்..! நடந்தது என்ன? முழு விவரம்...!
அ.தி.மு.க பொதுக்குழு கூட்ட மேடையில் இருந்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறியதால் நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வானகரத்தில் ஸ்ரீ வாரு வெங்கடஜலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு கூடியது. அப்போது இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆதரவு உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டனர். இதையடுத்து, பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே மேடையில் அருகருகே இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இவர்கள் இருவருக்கு நடுவே தமிழ் மகன் உசேன் அமர்ந்து இருந்தார். பொதுக்குழுவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்துவதற்கு முன்னாள் முதல்வரும் கட்சி ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செலவம் முன்மொழிந்தார்.
பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். இதைத்தொடர்ந்து மேடையில், அனைத்து தீர்மானங்களையும் இந்தபொதுக்குழு நிராகரிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசினார். இதையடுத்து, கே.பி.முனுசாமி பேசுகையில், அடுத்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமையுடன் மீதமுள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசுகையில், எடப்பாடி பழனிச்சாமியை தொண்டர்கள், மக்கள் ஒற்றை தலைமையாக ஏற்றுக்கொண்டு விட்டனர் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பன்னீர் செல்வம் அரங்கத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு நிலவியது. அடுத்த மாதம் ஜூலை 11 ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வெள்ளி கிரீடமும், வீர வாளும் பரிசாக வழங்கப்பட்டது. தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார். இதையடுத்து பரபரப்பாக தொடங்கிய பொதுக்குழு பரபரப்புடன் நிறைவு பெற்றது.