கோடை விழாவில் களைகட்டிய டாஸ்மாக்: மலருடன் மதுவையும் தேடிய 'வண்டுகள்'

உதகையில், மலர்க்கண்காட்சியின் போது, ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-05-27 06:15 GMT

நீலகிரி மாவட்டம் உதகையில், ஆண்டுதோறும் கோடைவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பெருந்தொற்றால், கடந்த 2 ஆண்டுகளாக மலர்க்கண்காட்சி நடைபெறவில்லை.

இந்த நிலையில், இந்தாண்டுக்கான கோடை விழா, மே 20 ஆம் தேதி, உதகையில் தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில், பல்வகை மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன; மலர்களால் பல உருவங்கள் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது, பார்வையாளர்களை வெகுவாக ரசிக்க வைத்தது.

உதகை மலர்க்கண்காட்சியை தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து, மலர்க்கண்காட்சியை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால், உதகையே களை கட்டியிருந்தது.

உதகை மலர் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டும், அங்கு மது விற்பனை ரூ.10 கோடிக்கு நடைபெற்றுள்ளது தெரிய வந்தது.

டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், மலைமாவட்டமான நீலகிரியில், அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் 75 உள்ளன. உதகையில் கோடை சீசன் களை கட்டியதுமே விற்பனை சூடுபிடித்தது. எனவே, மதுக்கடைகளுக்கு கூடுதலாக பல்வேறு வகை மதுபாட்டிகள் கொண்டு வரப்பட்டன.

மதுக்கடைகளில் இருந்து மட்டும் தினமும் சராசரி ரூ.1.80 கோடிக்கு விற்பனையானது. குறிப்பாக, மலர்க்கண்காட்சி நடைபெற்ற மே 20 ஆம் தேதி முதல், மே 24 வரை மட்டும். ரூ. 10 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News