ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை: மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநர் சட்ட மசோதாவை மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார்.;
பைல் படம்.
சட்டமன்றத்தில் 2022 அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்தின் காலம் நவம்பர் 27 ஆம் தேதியுடன் காலாவதியானது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், ஆளுநர் தரப்பிலிருந்து கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தது. கேள்விகளுக்கு அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. 2022 நவம்பர் 22 ஆம் தேதி ஆளுநரை தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தரப்பில் நேரம் கேட்கப்பட்டது.
ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான சட்ட மசோதா குறித்த நவம்பர் 24ம் தேதி விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் நவம்பர் 25ம் தேதி ஆளுநருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நாளை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநர் மாளிகையிலிருந்து சபாநாயகர் அலுவலகத்திற்கு சட்ட மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.