தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராதாகிருஷ்ணன் சாலையில் காரில் சென்ற போது, திடீரென காரை நிறுத்தி அந்த வழியாக வந்த 29c பேருந்தில் ஏறி திடீரென ஆய்வு செய்தார். இதைப்பார்த்து பேருந்திலிருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் பேருந்திலேயே சிறிது நேரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக பயணம் செய்தார்.
அப்போது பயணம் செய்த பெண்களிடம் இலவச பேருந்து பயணத்திட்டம் எந்த அளவிற்குப் பயனுள்ளதாக இருக்கிறது என கேட்டறிந்தார். இதற்கு பெண் பயணிகள் இந்த திட்டத்தால் நாங்கள் நல்ல பயன் அடைந்துள்ளோம் என கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையடுத்து தி.மு.க அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்திற்குச் சென்று முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் நினைவிடத்திற்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.