மின் கட்டண உயர்வு கண்டித்து 25-ம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வு கண்டித்து தமிழகத்தில் வருகிற 25-ம் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.;
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மின் கட்டணமும் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.இதனை கண்டித்து வருகிற 25ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மக்களை காப்பாற்றுவதற்காகவே அவதாரம் எடுத்த திராவிட மாடல் நாங்கள் தான் என தம்பட்டம் அடித்து வாய்ச்சவடால் வீரர்களாக திகழும் விடியல் அரசின் ஆட்சியாளர்கள் தொடர்ந்து மக்களை வஞ்சிக்கும் செயல்களையே செய்து வருகிறார்கள்.
விடியா அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு. சட்டம் ஒழுங்கு சீர் குலைவு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 25ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களிலும் சென்னையை பொறுத்தவரை ஒருங்கிணைந்த சென்னை மாநகரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் நலனை முன்வைத்து கழக அமைப்பு மாவட்டங்களில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழகத்தின் அனைத்து அணி நிர்வாகிகள் பொதுமக்களை திரளாக கலந்து கொள்ள செய்து மக்களின் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.