ஆம்னி பேருந்துகள் தாம்பரம், போரூர், சூரப்பட்டில் பயணிகளை இறக்கி ஏற்ற அனுமதி

கிளாம்பக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பின்னர் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிளாம்பாக்கத்தில் தங்களுக்கு போதிய வசதிகள் இல்லை என கூறிவந்தனர்.;

Update: 2024-02-07 07:39 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயணிகளை கிளாம்பாக்கம் மட்டும் இல்லாமல், தாம்பரம், போரூர் மற்றும் சூரப்பேட்டில் இறக்கி ஏற்ற சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான போதிய வசதிகள் செய்து கொடுக்கும் வரையிலும், கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்படும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தே இயக்கப்படும் என திட்டவட்டமாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி தெரிவித்தனர்.

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து புதிய நிலையத்தில் நிறுத்த போதிய இட வசதி இல்லை. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகளும் முழுமையாக முடிவடையவில்லை. கட்டுமானப் பணிகள் முடிந்து ஆம்னி பேருந்துகள் வந்து செல்லவும், ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகள் வந்து செல்லவும் ஏற்ற வசதி ஏற்படுத்தி தந்தால் மட்டுமே ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கதில் இருந்து இயக்குவோம் என திட்டவட்டமாக தெரிவித்தது மட்டும் இல்லாமல், அன்றைய தினமே கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்காததால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று பிப்ரவரி 7ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆம்னி பேருந்துகளுக்கு தாம்பரம், போரூர் மற்றும் சூரப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பயணிகளை இறக்கி ஏற்றவும், பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கி விடவும் மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில், சென்னை முழுவதும் ஆம்னி பேருந்துகளை இயக்க தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் வழித்தட வரைபடங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் பதிலைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் . 

Tags:    

Similar News