ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை: தமிழக அரசு தயங்கும் மர்மம் என்ன?- அன்புமணி
ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்கும் மர்மம் என்ன? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.;
ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்த தமிழக அரசு தயங்கும் மர்மம் என்ன? என பாமக தலைவரும், எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தீபஒளி திருநாளையொட்டி, லட்சக்கணக்கான மக்கள் இன்று முதல் சென்னையிலிருந்து தங்களின் சொந்த ஊருக்கு செல்லத் தயாராக இருக்கும் நிலையில், அவர்களின் தேவைகளை பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் பயணக் கட்டணத்தை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தியுள்ளன. சென்னையிலிருந்து நாளை மதுரை செல்வதற்கான கட்டணம் ரூ.3200, நெல்லைக்கான கட்டணம் ரூ.3400, கோவைக்கான கட்டணம் ரூ.3999 என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தீபஒளி திருநாள் நிறைவடைந்து வரும் 13-ஆம் நாள் மேற்கண்ட நகரங்களில் இருந்து சென்னை திரும்புவதற்கான கட்டணம் இன்னும் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.4950 கட்டணம் நிர்ணயிக்கப்படுள்ளது. நெல்லையிலிருந்து சென்னைக்கு ரூ.4120, கோவையிலிருந்து சென்னைக்கு ரூ.4950 கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆம்னி பேருந்து முன்பதிவுக்கான இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீப ஒளி திருநாளைக் கொண்டாடுவதற்காக கடன் வாங்கிக் கொண்டு சொந்த ஊர் செல்லும் மக்களை கசக்கிப் பிழியும் வகையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதும், அதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது.
கடந்த மாதத் தொடக்கத்தில் காந்தி பிறந்தநாள் உள்ளிட்ட தொடர் விடுமுறையின் போதும், பூசை விடுமுறையின் போதும் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். தமிழக அரசின் போக்குவரத்துத் துறையும் அதிரடி சோதனைகளை நடத்தி, ரூ.37 லட்சம் தண்டம் விதித்ததாக செய்தி வெளியிட்டது. ஆனால், உண்மை என்னவென்றால், மொத்தம் 13 ஆயிரம் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள், அவற்றில் 2092 பேருந்துகளுக்கு மட்டுமே இந்த தண்டத்தை விதித்துள்ளனர். அதுவும் கூட ஒரு பேருந்துக்கு சராசரியாக ரூ.1768 மட்டுமே தண்டமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர ஊர்தியில், தலைக்கவசம் அணியாமல், 50 கி.மீக்குள் அதிக வேகத்தில் சென்றாலே ரூ.2,000 தண்டம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு அதை விட குறைவாக தண்டம் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதற்காக பறிமுதல் செய்யப்பட்ட 119 ஆம்னி பேருந்துகளை அரசு உடனடியாக விடுவித்து விட்டது. சட்டத்தை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, இந்த அளவுக்கு கனிவு காட்டினால், அவற்றின் விதிமீறல்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கான காரணம் என்ன?
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டும் கூட, அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டும் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் தண்டம் விதிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.