சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்காக திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி

சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வீரர்களை உருவாக்க திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Update: 2022-12-29 13:47 GMT

முதல் அமைச்சர் மு..க ஸ்டாலின்.

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று பல்வேறு அரசு திட்டப்பணிகள் துவக்கவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த நம் மாநில இளைஞர்களுக்கு உலக தரம் வாய்ந்த பயிற்சிகளை வழங்கக் கூடிய வகையில் தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் உருவாக்கப்படும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அதாவது 21/4/2022 அன்று சட்டப்பேரவையில் நான் அறிவித்திருந்தேன்.

முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் நேரு வரவேற்பு அளித்தார்.

இந்த அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் வகையில் திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி ஒன்று உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வியில், வேலைவாய்ப்பில் அறிவுத்திறனில் தொழில் வளர்ச்சியில் மட்டுமல்ல நமது தமிழ்நாடு உலகத்தோடு போட்டியிட வேண்டும் அதற்கான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும். அதற்காக இந்த ஒலிம்பிக் அகாடமி பெரும் துணையாக இருக்கும். இது ஏதோ அமைச்சர் உதயநிதிக்கு மட்டுமல்ல.இந்த மாவட்ட அமைச்சர்களக இருக்கக்கூடிய நேரு, அன்பில் மகேஷ் ஆகியோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்புதான்.

அரசு விழாக்கள் என்றால் நம் மக்கள் விழாக்களாகவே நடத்தி வருகிறோம். மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை செய்து வரும் விழாவாக நடத்தி வருகிறோம். ஒவ்வொரு விழாவின் மூலமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக பயன் அடையக் கூடிய வகையில் நாம் அந்த விழாக்களை ஏற்பாடு செய்கிறோம். புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறோம். அறிவித்து முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைக்கிறோம். இந்த திராவிட மாடல் அரசாங்கமானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் எந்த வகையிலும் எல்லா உதவிகளையும் செய்து வரக்கூடியது என்பதன் அடையாளம் தான் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த அரசு விழா.

ஏழை எளிய அடித்தட்டு விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரும் ஆட்சியாக நம்முடைய கழக ஆட்சி செயல் பட்டு வருகிறது. இதில் சமூகத்தின் சரி பாதியான மகளிர் சமுதாயத்திற்காக தனியாக சிறப்பு திட்டங்களை வகுப்பதில் கழக அரசு அமையும் போதெல்லாம் முனைப்பாக இருந்து வந்திருக்கிறது.

மகளிருக்கு சொத்தில் சம உரிமை வழங்கியது, மகளிருக்கு வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு வழங்கியது, மகளிருக்கு உள்ளாட்சி மன்றங்களில் ஒதுக்கீடு தந்தது, பொருளாதாரத்தில் மேம்பட மகளிர் உதவி குழுக்கள் என மகளிர் நலம் காத்தவர் நம்முடைய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர். அவரது வழியில் இந்த அரசு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு முதல் அமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

Tags:    

Similar News