கொரோனா அதிகரிப்பால் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றமா ? - அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும் கூட எந்தவிதமான புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்

Update: 2022-06-09 13:33 GMT

அமைச்சர் மா சுப்ரமணியன் 

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையில் 22 இடங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் அதனை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் முகக்கவசம் அணியும் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதின் எதிரொலியாக தற்போது அங்கு தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அப்படி எந்த ஒரு தளர்வு அளிக்கப்படவில்லை, இன்று வரை தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

கொரோனா அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கொரோனா பரவல் அதிகரித்து வந்தாலும் கூட எந்தவிதமான புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என கூறினார்.

தற்போது பாதிப்பு குறைந்த அளவில் மட்டுமே உள்ளதால் பள்ளிகள் திறப்பதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது, திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என கூறினார்.

Tags:    

Similar News