ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு இல்லை: எய்ம்ஸ் குழு அறிக்கை
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்று எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை தெரிவிக்கிறது;
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்கள் அங்கு சிகிச்சையில் இருந்த அவர், டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கூறிய நிலையில், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டார். ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியது.
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட பலரிடம் விசாரணை மேற்கொண்டது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள், சந்தீப் சேத் தலைமையிலான7 பேர் அடங்கிய குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தநிலையில், இந்தக்குழு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஆணையத்தில் அளித்த வாக்குமூலம் ஆகியவற்றை ஆய்வு செய்து ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையில்,
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக 5 முதல் 7 நாட்கள் அவருக்கு காய்ச்சல் மற்றும் குடல் இயக்க பாதிப்பு இருந்துள்ளது. அவரது குடும்ப மருத்துவரான சிவக்குமார் ஜெயலலிதாவின் உடல்நிலையை பரிசோதித்துள்ளார். இதை தொடர்ந்து செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 10 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது, அவருக்கு மூளையின் செயல்திறன் குறைந்து ஆக்சிஜன் அளவு 48 சதவீதமும், நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 88 என்ற அளவிலும், ரத்த அழுத்தம் 140/70 என்ற அளவிலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாகவும் இருந்துள்ளது.
முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இன்சுலின் உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. இருதய துடிப்பை கட்டுப்படுத்த பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது.
தொடர்ந்து லண்டன் மருத்துவர் ரிச்சட் பிலே உள்பட அப்பல்லோ சிறப்பு மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவ குழுவும் சிசிக்சை அளித்துள்ளனர். டிசம்பர் 3ஆம் தேதி ஜெயலலிதா உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி மூச்சுவிடுவதற்கு சிரமபட்டுள்ளார். இதை தொடர்ந்து இதயம் செயலிழந்தால் எக்மோ கருவி பொருத்தப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 5ஆம் தேதிஅப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவை பரிசோதித்து மூளை மற்றும் இதயம் செயலிழந்தது என்பதை உறுதி செய்தனர். டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
எனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை என்றும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் எய்ம்ஸ் மருத்துவ குழு தெரிவித்துள்ளது