தமிழகத்தில் 4 நெடுஞ்சாலை திட்டங்களை கைவிட நெடுஞ்சாலை ஆணையம் முடிவு

நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தில் 4 முக்கிய நெடுஞ்சாலை பணிகளை கைவிட, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

Update: 2021-12-25 05:15 GMT

தமிழகத்தில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை பணிகளை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மேற்கொண்டு வருகிறது. எனினும், இதில் பல்வேறு சிக்கல்கள் நீடிப்பதால், பணிகள் தாமதமாகின்றன. குறிப்பாக ஆக்கிரமிப்பு அகற்றம், நிலம் கையகப்படுத்துதல் பணிகள், நீதிமன்ற வழக்குகள், சாலை பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிப்பதற்கு தடையாக உள்ளன.

இந்நிலையில், நிலமெடுப்பது உள்ளிட்ட சிக்கல்களால், தமிழகத்தில் 4 நெடுஞ்சாலை பணிகளை கைவிட இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தமிழ்நாடு-கேரள எல்லையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான இரண்டு, 4 வழித் திட்டங்களும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வாலாஜாபேட்டை வரையிலான இரண்டு 6 வழித் திட்டங்கள் அடங்கும்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலம் கையகம் செய்யும் பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் நிலம் கையகம் செய்ய முடியாமல் அனைத்து திட்டங்களும் முடங்கியுள்ளன. சுமார் 19 குவாரிகள் மூடப்பட்டுவிட்டாலும், நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் அனுமதி பெறுவது சாத்தியமற்றதாக உள்ளது; இதேநிலை தான், ஸ்ரீபெரும்புதூர் - வாலாஜாபேட்டை வழித்தடத்தில் உள்ள இரண்டு திட்டங்களிலும் நிலவுவதாக,நெடுஞ்சாலை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், விக்கிரவாண்டி முதல், சோழபுரம் வரையிலான இரு, 4 வழிச்சாலை திட்டங்களில், இன்னும் தேவையான நிலம் கிடைக்கவில்லை, எனவே மீதமுள்ள பகுதியின் பணிகளை ரத்து செய்து, ஒப்பந்தத்தை முடித்துவிட திட்டமிடப்படுள்ளதாக தெரிகிறது. பொள்ளாச்சி - கோவை 4 வழிச்சாலை திட்டத்தில், சுங்கச்சாவடி அமைக்க தேவையான நிலத்தை மாநில அரசு இதுவரை வழங்காததால், வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணத்தை வசூலிக்க முடியவில்லை .

ஒருசில திட்டங்கள் 2016 இல் தொடங்கப்பட்டன. எனினும், இன்னும் இதுவரை நிலம், மண் மற்றும் பிற அனுமதிகளைப் பெற, நெடுஞ்சாலை ஆணையம் போராடிக் கொண்டிருக்கிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண 25 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஜூலை மாதம் ஆலோசனை நடத்தினார். எனினும், நெடுஞ்சாலை பணிகளுக்கான சிக்கல் நீடிக்கிறது.

Tags:    

Similar News